×

ஒட்டன்சத்திரம் அருகே பண்ணைகளுக்குள் மழைநீர் புகுந்து 5,000 கோழிகள் சாவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணைகளில் மழைநீர் புகுந்ததில் சுமார் 5 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் முதல் தாராபுரம் வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளின்போது சாலையின் இருபுறங்களிலும் கிராமங்களில் உள்ள குளத்திற்கு செல்லும் நீர்வரத்து ஓடைகளை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் பல இடங்களில் சேதமடைந்து, மழைக்காலங்களில் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஒட்டன்சத்திரம் அருகே பெருமாள்கோவில் வலசையை சேர்ந்த விவசாயிகள் பூபாலன், தர்மர் ஆகியோரின் வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் அங்குள்ள  2 கோழிப்பண்ணைக்குள் மழைநீர் புகுந்ததில் சுமார் 5 ஆயிரம் கோழிகள் பலியாகின.

பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘‘பெருமாள்கோவில் வலசையில் மழைநீர் புகுந்ததில் 2 வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன. 2 கோழிப்பண்ணைகளில் 5 ஆயிரம் கோழிகள் பலியாகி விட்டன. சேத மதிப்பு சுமார் ரூ.5 லட்சம். இழந்த வாழ்வாதாரத்தை மீட்க எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான்கு வழிச்சாலை பணிகளில் ஓடைகளை முறையாக தூர்வாரி குளத்திற்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் வரக்கூடிய மழைக்காலத்தில் தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும்’’ என்றனர்.

Tags : Ottanchattiram ,farms , Ottanchatram, farm, rainwater, 5,000 chickens die
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...