×

உதகையில் மருத்துவ கல்லூரி கட்டும் பணிக்கு இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: உதகையில் மருத்துவ கல்லூரி கட்டும் பணிக்கு இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் மருத்துவக் கல்லூரி கட்ட நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் 1967ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக தமிழக அரசு, மத்திய அரசுக்கு 33.30 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டது.

பிறகு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை எடுக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி கே. ரவிசந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது அந்நிறுவனத்தின் சார்பாக ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் சங்கர நாராயணன், தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் 173.16 ஏக்கர் மட்டுமே உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் 292.17 ஏக்கர் நிலத்தை மீண்டும் எடுப்பதாக குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருக்கிறார். நிலத்தை மீண்டும் எடுக்கும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவின் அடிப்படையில் நடக்கும் அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயநாராயணன், உதகையில் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து அனைத்து பணிகளுக்கும் தடை விதிக்க மறுத்த நீதிபதி, உதகையில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த நிலத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் உத்தரவிட்டனர்.

Tags : High Court ,stay ,Udagai High Court ,Udagai , High Court,medical college, Udagai
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...