×

அசாம், பீகாரில் மழை வெள்ளம் கோரத்தாண்டவம்...! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு!!

அசாம்:  அசாம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அசாமில் கோரத்தாண்டவம் ஆடும் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு மிகவும் திண்டாடி வருகிறது.  இதுவரை அசாமில் ஏற்பட்ட பேரழிவால் வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்கள் முழுவதும் 24 மாவட்டங்களை சேர்ந்த 26 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அசாமில் 2 ஆயிரத்து 525 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ளம் முற்றிலுமாக சூழ்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீகார் மாநிலத்திலும், இடியுடன் கூடிய கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். மேலும், முக்கிய நதிகளில் அபாய எல்லையை தாண்டி  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மழைவெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் உத்திரபிரதேச மாநிலம் மகோபா நகரில் பெய்த கனமழையால், மாவட்ட அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கட்டிலின் மேல் அமர்ந்து நோயாளிகள் தத்தளித்து வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நனைந்தபடி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு அசாம், பீகார், மேகாலயா உட்பட 9 வடமாநிலங்களில் கனமழை பெய்யும் என்று அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Assam ,rain floods ,Bihar , Assam, Bihar ,rain floods , Death toll ,
× RELATED ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக...