×

கான்ட்ராக்டர்கள் யாரும் எடுக்க முன்வராததால் ரூ.1000 கோடி மதிப்புள்ள 31 டெண்டர்களை ரத்து செய்தது தமிழக பொதுப்பணித்துறை

* ஊரடங்கால் கட்டுமான துறையில் ஆட்கள் பற்றாக்குறை
* கம்பி, மணல், கற்கள் விலைகள் எகிறியது
* கூலியும் அதிகம் கேட்பதால் அதிரடி முடிவு

சென்னை: கொரோனா ஊரடங்கால் கான்ட்ராக்டர்களிடம் பணம் இல்லை, வேலை செய்யவும் ஆட்கள் இல்லை, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பொதுப்பணித்துறை சார்பில் விடப்பட்ட 31 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1000 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஜூலை 31 வரை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

இதனால் பொதுப்பணித்துறையின் அனைத்து கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டன. இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஆனாலும், வெளிமாநில தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், தற்போது இங்குள்ள பணியாளர்களை வைத்து மட்டுமே கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

மேலும், மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்ட பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டதால், பல இடங்களில் கட்டுமான பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் பெரும்பாலான பணிகள் மந்தநிலையில் நடந்து வருகிறது. இந்த நிலையில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.9.95 கோடி செலவில் ஓரத்தூர் புதிய நீர்த்தேக்கம் பணிகள், ரூ.11.80 கோடி செலவில் தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்துக்கு ரெகுலேட்டர், சிறிய பாலம், கால்வாய் உள்ளிட்ட பணிகள், ரூ.50 கோடி செலவில் மீஞ்சூரில் புதிய நீர்த்தேக்கம், ரூ.40 கோடி செலவில் ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகள், ரூ.4.20 கோடியில் நம்பியாற்றில் தடுப்பணை, ரூ.109 கோடி செலவில், ஆவடி, கண்டியப்பேரி உட்பட 4 இடங்களில் இரண்டாம் தர அரசு மருத்துவமனை பணிகள் உட்பட 31 பணிகளுக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் டெண்டர் விடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் டெண்டர் எடுத்தால் கூட பணியாளர்கள் இல்லாமல் திட்டப்பணிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், ஒப்பந்ததாரர்கள் பணம் இல்லாத சூழலில், வங்கிகள் மூலம் கடன் பெறுவதில் தாமதம் ஏற்படும் என்பதால் டெண்டர் எடுத்தாலும் பணம் இல்லாமல் பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வும் ஒரு காரணம். எனவே, கடந்த 2 மாதத்தில் அறிவிக்கப்பட்ட டெண்டர் நீட்டிக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட டெண்டர் விட முடியாத நிலையில், தற்போது பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு வருவது கான்ட்ராக்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu Public Works Department ,contractors , Contractors, Rs.1000 crore, 31 tenders, canceled, Tamil Nadu Public Works Department
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: ...