×

தமிழக கவர்னர் மாளிகை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 76 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா: ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 76 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கிண்டியில் தமிழக கவர்னர் மாளிகை உள்ளது. இங்கு தமிழக காவல்துறை உட்பட மத்திய அரசின் சிஆர்பிஎப் வீரர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கவர்னர் மாளிகை பாதுகாப்புக்கு என தனியாக ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசு தலைவர் முதல் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்தால் கவர்னர் மாளிகையில்தான் தங்குவது வழக்கம்.

மேலும், மத்திய அமைச்சர்கள் தற்போது அடிக்கடி தமிழகம் வருவதால் பாதுகாப்பு பணிக்காக கவர்னர் மாளிகையில் ஒரு பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு என தனியாக முகாம் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில், சிஆர்பிஎப் முகாம் அலுவலகத்தில் உள்ள வீரர் ஒருவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அந்த வீரருக்கு கொரோனாவுக்கான பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனை முடிவில் சிஆர்பிஎப் வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து சிஆர்பிஎப் முகாம் அலுவலகத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர்.

அதில் 76 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அதைதொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பாதித்த 76 சிஆர்பிஎப் வீரர்களையும் சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரே நேரத்தில் கவர்னர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் 76 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கவர்னர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags : Corona ,soldiers ,CRPF ,Tamil Nadu ,Governor's House , Tamil Nadu Governor's House, security mission, 76 CRPF soldier, Corona, staff shock
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்