×

இந்திய எல்லையில் இருந்து படையை அமைதியாக வாபஸ் பெற வேண்டும்: சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் சட்டம்

வாஷிங்டன்: ‘இந்திய எல்லைப் பகுதியில் இருந்து சீனா அமைதியான முறையில் படைகளை வாபஸ் பெற வேண்டும்,’ என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த  மாதம் 15ம் தேதி சீன ராணுவம் நடத்திய  தாக்குதலில்  இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இப்பிரச்னையை தீர்க்க, இந்தியா-சீனா ராணுவங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  அதன்படி, இருதரப்பும் எல்லையில் இருந்து படைகளை விலக்கி வருகின்றன. ஆனால்,சீனா முழுமையாக வாபஸ் ஆகவில்லை.

இந்திய எல்லையில் சீனா வாலாட்டி வருவதை அமெரிக்கா கடுமையாக கண்டித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஆளும் குடியரசு கட்சியும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் இணைந்து, தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தில் புதிய திருத்தத்தை செய்துள்ளன. அதன்படி, `இந்திய எல்லையில் இருந்து சீனா அமைதியான முறையில் தனது படைகளை வாபஸ் பெற வேண்டும். இப்பிரச்னையில் தூதரக அளவிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டுமே, தவிர ராணுவத்தின் மூலம் அல்ல,’ என்று கூறப்பட்டுள்ளது.

* திருத்தத்துக்கு வித்திட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி
சீனாவுக்கு எதிரான இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய வம்சாவளி உறுப்பினரான ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆவார். இது குறித்து அவர் கூறுகையில், ``இந்தியா மீதான சீனாவின் தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாதது. எல்லை பிரச்னையில் இருதரப்பும் அமைதியான முறையில் தீர்வு காண்பதன் மூலம், இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை ஏற்படும்,’’ என்றார்.

* ‘இந்தியாவை அச்சுறுத்த முடியாது’
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ லண்டனில் நேற்று அளித்த பேட்டியில், ``சட்டப்பூர்வமான உரிமை இல்லாத போது, கடல் பிராந்தியங்களை சீனா சொந்தம் கொண்டாட முடியாது. உலக சுகாதார நிறுவனம் போன்ற சர்வதேச அமைப்புடன் கூட்டணி அமைத்து கொண்டு வைரஸ் குறித்த உண்மையை மூடி மறைக்க முயற்சிக்க கூடாது. தென் சீன கடல் பகுதியிலும், இந்திய எல்லையிலும் சீனாவின் அத்துமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை சீனா அச்சுறுத்த முடியாது,’’ என்றார்.

Tags : border ,United States ,China ,Indian , Law on Indian border, force peace, withdrawal, China, US
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்