×

மருந்து, தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு உதவ ‘டம்மி’ கொரோனா: அமெரிக்கா உருவாக்கியது

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் போலவே, மனிதனிடம் ஆன்பாடிகளை உருவாக்கக் கூடிய, மரபணு ரீதியாக மாற்றப்பட்ட கலப்பு வைரஸ் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம், மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் வேகமெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பொதுவாக, கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியவை, உயிரையே பறிக்கக் கூடியவை. இதனால், இத்தகைய வைரசுக்கான மருந்து கண்டுபிடிக்க வேண்டுமெனில் அதிபயங்கர பாதுகாப்பு நிறைந்த ஆய்வகங்கள் தேவை. மிக மோசமான அந்த வைரசை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் தங்கள் உடலை முழுவதுமாக மூடும் மருத்துவ ஆடைகள் அணிந்து, சிறப்பு காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்ட அறைகளில் இருந்தபடி பணியாற்ற வேண்டும்.

இந்த வசதிகள் இருக்க வேண்டும் என்பதால், மிக குறைவான ஆய்வகங்களில் மட்டுமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பள்ளியின் ஆய்வாளர்கள், லேசான வீரியம் கொண்ட புதிய வைரஸ் ஒன்றை உருவாக்கி உள்ளனர். பொதுவாக ஆய்வக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் வெசிகுலர் ஸ்டோமேடிடிஸ் வைரஸ் (விஎஸ்வி) உடன், நாவல் கொரோனா வைரசின் மரபணுவை கலந்து கலப்பு வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரசும், கொரோனாவைப் போலவே மனிதர்களிடம் ஆன்டிபாடி எனப்படும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். ஆனால், மோசமான பாதிப்பை விளைவிக்காது. இந்த கலப்பு வைரசை வழக்கமான ஆய்வக கட்டமைப்புக்குள் பயன்படுத்த முடியும். இதனால், மிக அதிக பாதுகாப்பு அம்சங்கள் தேவையில்லை என்பதால், கொரோனா வைரஸ் மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இன்னும் நிறைய ஆய்வகங்கள் ஈடுபட முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

* செம்ம கிராக்கி
வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பள்ளியின் மூத்த ஆய்வாளர் சீன் வீலன் கூறுகையில், ‘‘இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்ற ஒரு அறிவியல் உபகரணத்தின் தேவையை வாழ்நாளில் பார்த்ததில்லை. ஆய்வுப்பணிகளுக்காக புதிய கலப்பின வைரசை அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் விநியோகித்துள்ளோம். இன்னும் பல நாடுகளும் இந்த வைரசுக்காக கோரிக்கை விடுத்துள்ளன,’’ என்றார். இந்த ஆய்வக தயாரிப்பு வைரசுக்கு ஆய்வாளர்கள் விஎஸ்வி-சார்ஸ்-சிஓவி-2 என பெயரிட்டுள்ளனர்.

Tags : United States , Find Drug, Vaccine, Help ‘Dummy’ Corona, USA
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்