×

காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை மார்க்கெட்டில் போதிய இடம் ஒதுக்காததால் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை காய்கறி மார்க்கெட்டில் போதிய இடம் ஒதுக்காததால் வியாபாரிகள் நேற்று அதிகாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ராஜாஜி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதனால், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக இந்த மார்க்கெட், காஞ்சிபுரத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள வையாவூருக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வையாவூர் காய்கறி மார்க்கெட், சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர். வையாவூரில் கடந்த 4 மாதமாக செயல்பட்ட தற்காலிக மார்க்கெட், சுமார் 7 கிமீ தூரமுள்ள நசரத்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு வியாபாரிகளுக்கு போதுமான இடம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி பலமுறை முறையிட்டனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள், வையாவூர் சாலையில் மார்க்கெட் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை, காஞ்சி தாலுகா போலீசார், துப்புரவு ஆய்வாளர் இக்பால் ஆகியோர் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் சமரசம் பேசினர். அப்போது, காய்கறி வியாபாரிகளுக்கு 147 கடைகள் வேண்டும். ஆனால், 130 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட்டில் போதுமான இடம் ஒதுக்கினால் மட்டுமே அங்கு சென்று காய்கறி விற்பனை செய்வோம். அதுவரை அங்கு செல்ல மாட்டோம் என வியாபாரிகள் சங்க தலைவர் மோகன் கூறினார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : space ,Traders ,Nasarapet ,Kanchipuram ,road , Kanchipuram, Nasarapet market, traders, road block
× RELATED மனவெளிப் பயணம்