×

செஸ் விளையாடுவது கொரோனாவால் அதிகரித்துள்ளது: விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி

சென்னை: கொரோனாவுடன் போராடும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு விளையாட்டாக சதுரங்கம் மாறியுள்ளது. அதனால்  சதுரங்கம் உலகளாவிய விளையாட்டாக மாறியுள்ளது என்று விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார். உலக செஸ் தினத்தை முன்னிட்டு,  5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது: வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு விளையாட்டாக சதுரங்கம் மாறியுள்ளது. பலர் முதல் முறையாக சதுரங்கம் பக்கம் திரும்பி உள்ளனர். அதனால் சதுரங்கம் இன்று உலகளாவிய விளையாட்டாக மாறியுள்ளது. சதுரங்க விளையாட்டு ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் பரவி இருந்தாலும் இந்தியாவில் சதுரங்கம் விளையாடுவது அரிதாகவே இருந்தது. இத்தனைக்கும் சதுரங்கம் நமது பண்பாட்டின் ஒரு அங்கமாகவே இருந்து இருக்கிறது. ஆனாலும் சதுரங்கம் விளையாடுவதற்கான ஆர்வம் நம் நாட்டில் குறைவாக தான் இருந்தது.  

நான் 2000ம் ஆண்டு உலகம் சாம்பியன் பட்டம் பெற்ற பிறகு நிலைமை ஓரளவுக்கு மாறியது. பலர் சதுரங்கம் விளையாட தொடங்கினர். குறிப்பாக படிக்கிற பிள்ளைகளுக்கு நினைவாற்றலை பெருக்கிக்கொள்ள சதுரங்க விளையாட்டு  உதவும் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். அது உண்மைதான். எனது தாயின் மூலமாகத்தான் சதுரங்க விளையாட்டை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வமாக சதுரங்க விளையாட்டை சொல்லித் தருகின்றனர். அதிலும் இந்த கொரோனா காலத்தில் இணையதளம் மூலமாக சதுரங்கம் விளையாடுவது  இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு நல்ல மாற்றம். இணையத்திற்கு நன்றி. கொரோனா காலத்திற்கு பிறகும் இப்போது சதுரங்கம் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கை குறையாது. சதுரங்கம் விளையாடுவது நம் திறமையை, நினைவாற்றலை மேம்படுத்திக்கொள்ள உதவும். இவ்வாறு விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.

* முதல் செஸ் தினம்
பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃஎப்ஐடிஈ) 1924ம் ஆண்டு நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஐ.நா. பொதுச் சபை ஜூலை 20ம் தேதியை உலக செஸ் தினமாக அறிவித்தது. முதல் உலக சதுரங்க தினம் இந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. அமைதியை வலுப்படுத்துவதற்கும், பாரபட்சமற்ற கொள்கைகளை நடத்துவதற்கும், சிறந்த சமூகங்களை உருவாக்குவதற்கும் ஒரு கருவியாக சதுரங்கம் மாறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃஎப்ஐடிஈ) தலைவர் ஆர்கடி டுவோர்கோவிச் கூறினார்.

Tags : Viswanathan Anand ,Corona , Playing Chess, Corona, Increased, Viswanathan Anand, Interview
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...