×

மார்ச் 1 முதல் ஜூன் 10 வரை 444 கொரோனா மரணங்கள் மறைப்பு: தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: சென்னையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமைக்கப்பட்ட மறு ஆய்வு குழு அறிக்கையின் அடிப்படையில், தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த மார்ச் 1 முதல் ஜூன் 10ம் தேதி வரை 444 மரணங்கள் விடுபட்டுள்ளதாக தமிழக அரசு தற்போது ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் நேற்று கொரோனா பாதிப்பு மரணக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட மரணங்களை சேர்த்து சென்னையில் மட்டும் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,939 ஆக உயர்ந்துள்ளது.  

சென்னையில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வந்தது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பலர் தீவிர அறிகுறிகளுடன் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மரணம் அடைந்தனர். குறிப்பாக, ஏற்கனவே பல்வேறு இணை நோய்களுடன் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தனர்.

இப்படி மரணம் அடைபவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தும்போது பலருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இதை தவிர்த்து, பல்வேறு இணை நோய்களுடன் இருந்தவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் வீட்டில் மரணம் அடைந்தனர். இவ்வாறு மரணம் அடைந்தவர்களை கணக்கில் சேர்ப்பதில்லை என்ற தகவல் தினகரன் நாளிதழுக்கு கிடைத்தது. அதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை குறைத்துக் காட்டும்படி அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து, தினகரன் நாளிதழ்  சென்னையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மயானங்களில் கள ஆய்வு நடத்தியது. இதில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சென்னையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு  500க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று ஜூன் 3ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் இறப்பு காரணம் தொடர்பாக அறிக்கை அளிக்க மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால், சென்னை மாநகராட்சி  தயார் செய்த அறிக்கையில் 199 மரணங்கள் மறைக்கப்பட்டு இருப்பது முதல்கட்டமாக கண்டறியப்பட்டது.

இதற்கிடையே, சென்னையில் கொரோனா மரணங்கள் விடுபட்டது தொடர்பாக ஆய்வு செய்ய தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு சென்னையில் மார்ச் முதல் ஜூன் 10ம் தேதி வரை நடந்த மரணங்கள் மற்றும் அதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அளித்தது. இந்த அறிக்கையின்படி, விடுபட்ட 444 மரணங்களை கொரோனா மரணங்களின் பட்டியலில் சேர்ப்பதாக தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சுகதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்ச் மாதம் முதல் சென்னையில் கொரோனா பாதிப்பு இறப்பவர்கள் தொடர்பான விவரங்கள் சென்னை மாநகராட்சியிடம் இருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டு கொரோனா பாதிப்பு தொடர்பான தினசரி அறிக்கையில் அறிவிக்கப்பட்டு வந்தது. சென்னையில் கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஐசிஎம்ஆர் விதிகளின் அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களில் இறந்தவர்கள் மற்றும் மயானங்களில் உள்ள இறப்பு அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 444 மரணங்கள் கண்டறியப்பட்டது. ஐசிஎம்ஆர் விதிகளின்படி இந்த மரணங்கள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைத்து கணக்கு காட்டப்பட்டதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 444 பேர் மரணம் அடைந்தது விடுபட்டுள்ளது தெரியவந்தது. அந்த காலக்கட்டத்தில் மிகவும் நெருக்கடி இருந்ததால் சரியாக கணிக்க முடியவில்லை. இதில் பலரும் மாரடைப்பு, சிறுநீரக நோய் போன்றவற்றால் இறந்தவர்கள். அவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிகிறது. இறந்தவர்களின் மொத்த பட்டியலில் இந்த 444 பேரின் பெயர்களும் சேர்க்கப்படும்” என்றார். இதன்படி இந்த மரணங்கள் அனைத்தும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதைச் சேர்ந்து சென்னையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,939 ஆக உயர்ந்து உள்ளது.

* ‘தினகரன்’ நாளிதழ் தகவல் உறுதி
சென்னையில் கொரோனா மரணங்கள் குறைத்து காட்டப்படுவது தொடர்பாக தினகரன் நாளிதழ்தான் ஜூன் 3ம் தேதி முதலில் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து, ஜூன் 4, ஜூன் 7, ஜூன் 15 என்று தொடர்ச்சியாக கொரோனா மரணங்கள் மறைப்பது தொடர்பான செய்தியை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. இதை உறுதிப்படுத்தும்  வகையில் 444 மரணங்கள் குறைத்து காட்டப்பட்டுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags : corona deaths ,Government of Tamil Nadu , From March 1 to June 10, 444 corona, death cover, approved by the Government of Tamil Nadu
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...