×

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது: ஸ்வப்னா, சந்தீப்பை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹம்சத் என்பவர் சுவப்னாவிடம் இருந்து தங்கக்கட்டிகள் வாங்கியது தெரிய வந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகள் ஹம்சத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஸ்வப்னாவையும் கூட்டாளி சந்தீப்பையும் காவலில் எடுத்து விசாரிக்க சுங்கத்துறை மீண்டும் மனு செய்கிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. தூதரகத்துக்கு வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வரும் பொருட்களுக்கு சோதனையில் இருந்து விலக்கு உள்ளது. இது தூதரகத்துக்குரிய தனியுரிமை ஆகும். இதை சட்டவிரோதமாக பயன்படுத்தி அதிகாரிகள் துணையுடன், தூதரகத்தின் பெயரில் வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் மூலம் தங்ககட்டிகள் கடத்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஓராண்டு காலமாக தொடர்ந்து நடந்துள்ளது.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சரக்கு விமானத்துக்கு தூதரகத்தின் பெயரில் வந்த பார்சல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் முன்னிலையில் பிரித்து சோதனை செய்தனர். அப்போது அதற்குள் இருந்த 30 கிலோ தங்கக்கட்டிகளை பார்த்து அதிகாரிகள் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் அந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே விமான நிலையத்தில் சிக்கிய தங்ககட்டிகளை விடுவிக்குமாறு முதல் மந்திரி அலுவலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் வெளியானது. இதனால் இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியது. மேலும் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டதால் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தங்ககட்டிகள் கடத்தலில் தொடர்புடையதாக தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தங்ககட்டிகள் கடத்தலில் சந்தீப்நாயர் என்பவர் மூளையாக செயல்பட்டதும், அவர், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 3 கிலோ தங்கம் பிடிபட்ட போது கே.டி.ரமீஸ் என்பவருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்தது.



Tags : Sandeep ,Kerala ,Swapna ,arrest , Kerala gold smuggling, arrest
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது