×

தி.மலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தொற்றானது நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4233 ஆக உள்ளது. இதில் 2466 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1732ஆக உள்ளது.

இதனால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாவட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் திருவண்ணாமலைக்கு அதிகளவு நபர்கள் வருவதால்தான், கொரோனா தொற்றானது அதிவேகமாக பரவி வருகிறது என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே இருந்த நிலையில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டு வெளிநபர்கள் உள்ளே வருவதை மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும், மாவட்டத்தில், வீடு வீடாக சென்று பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையானது செய்யப்பட்டு வந்தது.

இதன் மூலம் கொரோனா நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள துக்காப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதே குடும்பத்தில் உள்ள ரஹமத்துல்லா என்பவர் நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதனால் குடும்பத்தில் உள்ள மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், தொற்று பாதிக்கப்பட்ட 12 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவர்கள் வசித்த பகுதிகள் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாவட்ட அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Corona ,mountains ,Thiruvanamalai , Corona infection
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...