திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு அழகு சேர்த்த மரச்சிற்பங்கள் கரையான்களால் நாசமாகி வரும் அவலம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பட்டுப்போன மரங்களில் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை கரையான்கள் சேதப்படுத்தி வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், பக்தர்கள் கிரிவலம் வரும் 14 கி.மீ. தூரமுள்ள பாதையில் பல வகையான மரங்கள் உள்ளது. இதில் சில மரங்கள் வண்டுகளின் தாக்கத்தால் பட்டுப்போக ஆரம்பித்தது. இந்நிலையில், பட்டுப்போன மரங்களை அகற்றாமல், அதில் மரச்சிற்பங்கள் உருவாக்க கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முடிவு செய்தார்.

அதன்படி, மரச்சிற்பங்கள் வடிவமைக்கும் பணியில் மகாபலிபுரத்தை சேர்ந்த சிற்பக்கலைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். அதற்காக 6 லட்சம் ஒதுக்கீடு செய்து, பட்டுப்போன 62 மரங்களில் சிற்பம் வடிவமைக்க ஏதுவான நிலையில் உள்ள 30 மரங்களில் பறவைகள், முயல், மயில், முதலை, பட்டாம் பூச்சி, குதிரை, வாட்ச், செல்போன், டால்பின், இந்தியா வரைபடம், இறகுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவங்கள் வடிவமைக்கப்பட்டது. இந்த சிற்பங்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கிரிவலப்பாதைக்கு மேலும் அழகு சேர்த்தது.

இந்நிலையில், பட்டுப்போன மரங்களில் உருவாக்கப்பட்ட மரச்சிற்பங்களை முறையாக பராமரிக்காமல் போனதால், கரையான்கள் சேதப்படுத்தி வருகிறது. சில சிற்பங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. பல லட்சம் செலவழித்து வடிவமைக்கப்பட்ட மரச்சிற்பங்களை, பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மீதமுள்ள மரச்சிற்பங்களையாவது பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>