×

தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் பிகாம் படிப்பில் சேர அலைமோதும் மாணவர்கள்: பி.காம்., சீட்டிற்கு தலா 5 லட்சம் பேரம் பேசுவதாக புகார்!!!

சென்னை:  தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் பிகாம் படிப்பில் சேர மாணவர்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா காரணமாக மூடப்பட்ட கல்வி நிலையங்கள் எப்போது? திறக்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, +2வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக பொறியியல், மருத்துவம், மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு குழப்பம் நிலவி வருகிறது. இதைபோல் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கும் மாணவர்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், மாணவர்களின் ஆர்வம் என்பது தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதனை பயன்படுத்திக்கொண்டு சில தனியார் கல்லூரிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. அதிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் பிகாம் படிப்பில் சேர மாணவர்கள் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களிலும் சில தகவல் தொடர்பு சாதனங்களிலும் பிகாம் படிப்பில் சேர்வது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது சில குறிப்பிட்ட கல்லூரிகளில் பிகாம் படிப்பிற்கு இடம் வாங்கி தருகிறோம் என கூறி அதற்கான கட்டணத்தையும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் சென்னையில் முன்னணியில் உள்ள ஒரு கல்லூரியில் பிகாம் படிப்பில் சேருவதற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பி.பி.ஏ., பி.எஸ்சி., போன்ற பிரிவுகளிலும் சேருவதற்கு 2 லட்சம் ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கல்லூரிகளில் இதுபோன்று அதிகளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட கல்லூரி நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் அதுபோன்ற கட்டணங்கள் ஏதும் நிர்ணயிக்க வில்லை. மெரிட் அடிப்படையிலேயே மாணவர்களை சேர்க்க போவதாக கூறியுள்ளனர்.

மேலும், எங்களுடைய கல்லூரி நிறுவனத்தை பயன்படுத்தி சில புரோக்கர்கள் இதுபோன்ற கொள்ளை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர். பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர மாணவர்கள் தற்போது ஆர்வம் காட்டாத நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், தனியார் கல்வி நிறுவங்களின் பெயர்களை பயன்படுத்தி பிகாம் போன்ற பிரிவுகளுக்கு புரோக்கர்கள் அதிகளவு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். இதற்கு கல்வியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதங்களில் வரும் செய்திகளை நம்பி பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், உடனடியாக சம்மந்தப்பட்ட புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : colleges ,Tamil Nadu ,B.Com , Students , BCom courses , private colleges , Tamil Nadu:
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...