×

சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்தது எப்படி? சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான 3 காவலர்களை சாத்தான்குளத்திற்கு அழைத்து வந்த சிபிஐ அதிகாரிகள், இருவரும் இறந்தது எப்படி? என்பது குறித்து நேற்று 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கொடூரமாக தாக்கி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் முருகன், சாமதுரை மற்றும் காவலர்கள் தாம்சன், முத்துராஜ், வேலுமுத்து, செல்லத்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் டெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி கொலை வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் வழக்குத் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதி சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரணையைத் துவக்கினர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சிபிஐ அதிகாரிகளும் வழக்குப் பதிந்து விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் ஆய்வாளர் தர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபிஐ தங்கள் காவலில் எடுத்து மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்தும், பின்னர் சாத்தான்குளம் கொண்டுசென்றும் கடந்த வாரம் விசாரணை நடத்தி பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர்.  இதனிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று கடந்த 18ம் தேதி சிபிஐ அதிகாரிகள் இருவர், சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் வியாபாரிகள் இருவரும் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த  கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் ஸ்ரீவெங்கடேஷ், பாலசுப்பிரமணியன் மற்றும் பணியில் இருந்த செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் 2ம் கட்டமாக கைது செய்யப்பட்ட சாத்தான்குளம்  ஏட்டு சாமதுரை, காவலர்கள் செல்லத்துரை, வேலுமுத்து ஆகிய 3 பேரையும் 3 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. அதன்பேரில் சிபிஐ கூடுதல் எஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் 8 பேர் இரு கார்களிலும்  மற்றொரு டெம்போ வேனில் கைதான சாமதுரை, செல்லத்துரை, வேலுமுத்து உள்ளிட்ட 3 காவலர்களையும் அழைத்துக் கொண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு நேற்று மதியம் 1.50 மணிக்கு வந்தனர். அப்போது காவல் நிலையத்துக்குள் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. விசாரணைக்கு அழைத்து வந்த காவலர்களை டெம்போ வேனில் வைத்தபடி காவல் நிலையத்தின் உள்ளே சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு அங்குள்ள போலீசாரிடம் பிற்பகல் 3 மணி வரை விசாரணை நடத்தினர். பின்னர் வேனில் இருந்த 3 காவலர்களையும் காவல் நிலையத்தின் உள்ளே அழைத்துச் சென்று சுமார் அரைமணி  நேரம் துருவித்துருவி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஏட்டு சாமத்துரையிடம் , வியாபாரிகளை  சிறையில் அடைக்க ஆவணங்களை தயார் செய்தது குறித்தும், உண்மையை மறைத்து  நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டதா? வியாபாரிகள் உடல் நிலை மற்றும்  வியாபாரிகளிடன் காயங்கள் குறித்து நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதா  என கேள்விகளை கேட்டு விசாரணை  மேற்கொண்டதாக தெரிகிகிறது. மற்ற இரு  காவலர்களிடமும் சில ரகசிய தகவல்களை சிபிஐ  அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிகிறது. பின்னர் 3 பேரையும் டெம்போ வேனில் இருக்க வைத்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு இரு குழுக்களாகப் பிரிந்த சிபிஐ அதிகாரிகளில் சுக்லா தலைமையிலான ஒரு குழுவினர் ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடம் மாலை 6.30 மணி வரை கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு தொடர்ந்து இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.  மேற்கொண்டனர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு சென்று இரவு 7 மணிக்கு விசாரணையை முடித்து புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது.

Tags : merchants ,CBI , Satankulam case, CBI officials ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...