×

ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நெல்லை இன்ஜினியர் சிறைபிடிப்பு

நெல்லை: ஓமன் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நெல்லை இன்ஜினியர் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். ஓமன் நாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒரு தனியார் நிறுவனம் மூலம் 2019ம் ஆண்டு செப்டம்பரில் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் கடந்த பிப்வரியில் எகிப்து நாட்டு கப்பலில் பயணித்துள்ளனர். அப்போது அவர்கள் சென்ற கப்பல் எதிர்பாராத விதமாக மூழ்கும் நிலை ஏற்பட்டது. அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாற்று கப்பல் மூலம் பயணத்தை தொடர்ந்தனர்.

நடுக்கடலில் வடக்கு ஓமனைச் சேர்ந்த கடற்படையினர் சுற்றி வளைத்து சலா என்ற தீவில் சிறை வைத்துள்ளனர். தாங்கள் சிறை வைக்கப்பட்டது குறித்து 15 பேரும் கடந்த பிப்.21ம் தேதி வாட்ஸ் அப் மூலம் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த 15 பேரில் நெல்லை மாநகர் பாளையங்கோட்டை, மூளிக்குளத்தைச் சேர்ந்த மணிராஜ் மாரியப்பன் (35) என்பவரும் ஒருவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்து விட்டு கப்பலில் இன்ஜினியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், பாளையில் உள்ள அவரது மனைவி வேல்மதி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மோசஸ் என்ற 5 வயது மகன், அர்ஷதியா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் அவரது மனைவி வேல்மதி தவித்து வருகிறார்.

இதுகுறித்து நெல்லை கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது கணவர் மணிராஜ் மாரியப்பன் ஓமன் நாட்டின் அகமது சுல்தான் என்பவரது கப்பலில் வேலை செய்வதற்காக கடந்த பிப்ரவரி 1ம் தேதி காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் ஓமன் சென்றார். கடந்த ஏப்.21ம் தேதி இரவு 8 மணிக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் பேசினார். அவருடன் சென்ற 21 பேரும் 3 கப்பல்களில் பிப்.4ம் தேதி பயணம் செய்துள்ளனர். அப்போது கடல் சீற்றம் காரணமாக ஓமன் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் கப்பல் சென்றதால், அந்த நாட்டு ராணுவம் பிடித்துச் சென்று விட்டதாகவும், தங்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். 5 மாதங்கள் கடந்த பின்னரும் எனது கணவர் மீட்கப்படாதது அச்சமாக உள்ளது. ஏற்கனவே வருவாய் இன்றி 2 குழந்தைகளுடன் தவித்து வருகிறேன். எனவே எனது கணவரை மீட்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Nellie Engineer ,Oman ,Nellai Engineer ,government , Oman,Nellai Engineer ,
× RELATED ஐவர் ஹாக்கி உலக கோப்பை: ஓமனில் இன்று தொடக்கம்