×

அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை : அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம் நடத்தக் கோரிய மனு தள்ளுபடியானது. மதுரை மாவட்டம். எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா நடக்கும். இவ்விழாவில் நடக்கும் ஆடித்தேரோட்டம் விசேஷமானது. இத்திருவிழா சுற்று வட்டார கிராமத்தினரின் முக்கிய விழாவாக கொண்டாடப்படும்.

கொரோனா ஊரடங்கால், கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை. தற்போது  ஊரடங்கில் தளர்வு அளித்து, ஊரக பகுதியிலுள்ள சிறு கோயில்களில் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அழகர்கோவில் தேரோட்டம் அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே நடக்கும். இப்போதைக்கு தேரோட்டம் நடப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் உள்ளது. தேரோட்டத்தில் குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர் முன் தயாரிப்பு பணியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

எனவே, ஆடி பவுர்ணமி அன்று அழகர்கோவிலில் ஆடித்தேரோட்டம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  அரசு வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘கொரோனா பரவல் அதிகமுள்ளது. இதனால் தான் வழிபாட்டிற்கு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தேரோட்டம் நடத்துவது சிரமம்’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டியதில்லை’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : auditorium ,Algarve ,Court ,Village , Court ,Rejected ,Alagarkoil ,chariot Function
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...