×

மறைமலைநகர் அருகே தனியார் பள்ளியை 2வது நாளாக பெற்றோர்கள் முற்றுகை: சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு: தனியார் பள்ளியை 2வது நாளாக பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சாலை மறியலில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் செயல்படும் தனியார் பள்ளியில், மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முழுவதுமாக செலுத்த கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளியை முற்றுகையிட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கல்விக் கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக நாங்கள் வருவாய் இழந்துள்ளோம். இந்தவேளையில், முழு கல்விக் கட்டணம் செலுத்த முடியாது என கோஷமிட்டனர்.

அவர்களிடம் சமரசம் பேசிய பள்ளி முதல்வர், முழு கட்டணமும் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்பு மற்றும் புத்தகம் வழங்கப்படும் என்றார். இதனால் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில், விடுதலை சிறுத்தைகள் கட்சி செங்கல்பட்டு தொகுதி செயலாளர் தென்னவன் தலைமையில், 100க்கு மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், தனியார் பள்ளியின் முன்பு திரண்டனர். ஆனால், அவர்களிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் மதியம் வரை எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், மதியம் சுமார் 1 மணியளவில், சென்னை  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம், சமரசம் பேசினர். அப்போது, பள்ளி கட்டணம் செலுத்த எங்களுக்கு அவகாசம் வேண்டும். அதுவரை ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என பெற்றோர்கள் கூறினர். அதற்கு, பள்ளி நிர்வாகத்தினர் யாரும் இல்லை. கொரோனா நேரத்தில் இவ்ளவு கூட்டம் இருக்க கூடாது. உங்கள் கோரிக்கைகள் குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் பேசி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்பு அனைவருக்கும் எடுக்க வேண்டும் கூறுகிறேன். அதற்கு நிர்வாகம் சம்மதிக்காவிட்டால், கல்வித்துறை அதிகாரியிடம் நான் நேரடியாக பேசி, உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : private school ,Parents ,Maraimalai Nagar , Maraimalai Nagar, Private School, 2nd day, Parental siege, road blockade
× RELATED பிரதமர் மோடி வரும் நிலையில் தனியார்...