×

தேர்வுத்துறையில் குழப்பமோ குழப்பம் பிளஸ்2 மறுகூட்டல், விடைத்தாள் நகல் குறித்து அறிவிப்பு வரவில்லை:மாணவ, மாணவிகள் தவிப்பு

சென்னை: பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் செய்யவும், மறுமதிப்பீடு செய்வதற்கான தேதியை தேர்வுத்துறை அறிவிக்காமல் உள்ளதால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7127 பள்ளிகளில் இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ரிசல்ட் கடந்த 16ம் தேதி வெளியானது. வழக்கமாக பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் நாளிலேயே, மறு கூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்காகவும் விடைத்தாள் நகல் பெறுவதற்காகவும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் அறிவிக்கப்படும். அதன் பேரில் நன்றாக தேர்வு எழுதியதாக நினைக்கும் மாணவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் படிப்பில் அதிக கட் ஆப் பெற உடனடியாக உரிய கட்டணத்தை செலுத்தி மறுகூட்டல் செய்ய விண்ணப்பிப்பார்கள். அதில் அதிக மதிப்பெண் கிடைத்தால் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் எளிதாக சேர முடியும். இதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தேவைப்படும்.

இந்த பணிகள் முடிந்த பிறகு, மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்துகொண்ட மாணவர்களுக்கான திருத்திய மதிப்பெண் பட்டியல்கள் வெளியிடப்படும். இந்த வகை மாணவ, மாணவியர் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்பார்கள். இதுதான் ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம். இப்போது எந்த அறிவிப்பும் இல்லாததால் மாணர்களின் நிலை கண்களை கட்டிகாட்டில் விட்ட கதையாக மாறிவிட்டது. இந்நிலையில், அரசுத் தேர்வுகள் துறை பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அறிவித்து 6 நாட்கள் கடந்துள்ள நிலையில் மறு கூட்டலுக்கான தேதியை எப்போது அறிவிக்கும் என்று மாணவ, மாணவியர் எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதிலும் விண்ணப்பிக்கும் நாள் 20ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சேர்க்கை பணிகள் தொடங்கும். இந்நிலையில், பிளஸ்2 தேர்வில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்து கொள்ளும் மாணவர்கள் எப்போது கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கையை பெறுவார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த குழப்பங்களுக்கு காரணம் தேர்வுத்துறையில் நடந்த பெரும் குழப்பங்கள் தான் என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


Tags : Reunion ,Student , Exam, Confusion or Confusion, Plus 2 Reunion, Copy of Farewell, Not Received, Student, Students
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...