×

ஐஓபி, பாங்க் ஆப் இந்தியா உட்பட 6 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு திட்டம்: நிதிப்பற்றாக்குறையை தீர்க்க இதிலும் கை வைக்கிறது

புதுடெல்லி: பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி உட்பட 6 வங்கியில் உள்ள பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வங்கிகளை தனியாருக்கு விற்பதன் மூலம், பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கையை 5ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஊரடங்கால் மத்திய மாநில அரசுகளின் வருவாய் வெகுவாக குறைந்து விட்டது. இதனை ஈடுகட்ட பொதுத்துறை பங்குகள் விற்பனை, சொத்துக்கள் விற்பனை, ரிசர்வ் வங்கி உபரி நிதி என பல்வேறு வகையில் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.. இதன் ஒரு பகுதியாக, வங்கி பங்குகளை விற்க மத்திய அரசு தற்போது முயற்சித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், பெரிய வங்கிகளுடன் சில வங்கிகளை மத்திய அரசு இணைத்தது. முதல் கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. பின்னர் விஜயா, தேனா வங்கிகள் பேங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன. கடந்த ஏப்ரலில் 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் முதல் அமலுக்கு வந்தது. ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டன.  

இந்த இணைப்பின்மூலம், பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் என 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே உள்ளன. இந்த எண்ணிக்கையை 4 அல்லது 5ஆக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகிய வங்கிகளில் உள்ள மத்திய அரசின் பெரும்பான்மை பங்குகள் விற்கப்பட உள்ளன தனியாருக்கு வங்கி பங்குகளை விற்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய அரசின் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், வங்கி பங்குகள் விற்பனை வருவாயை ஈட்டித்தர வாய்ப்புகள் உள்ளன. பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. எனவே, பங்கு விற்பனை ஒன்றே ஒரே தீர்வாக மத்திய அரசு கருதுகிறது என்றனர்.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து, மேற்கண்ட வங்கி பங்குகள் நேற்று ஏற்றம் அடைந்தன. மத்திய அரசின் பல்வேறு நிபுணர் குழுவினர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை, பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை அதிகபட்சம் 5ஆக மட்டுமே இருக்க வேண்டும் என பரிந்துரைத்தன. இருப்பினும், தற்போது பொதுத்துறை வங்கிகள் வராக்கடன் சுமையில் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கி விற்பனை இந்த ஆண்டு சாத்தியப்படாது என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. வங்கிகளை தனியார் மயமாக்கும் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கி தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Federal Government ,banks ,Bank of India ,IOP , IOP, Bank of India, 6 Public Sector Bank, Shares, Private Sale, Central Government Scheme, Deficit, Laying Hand
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...