×

மகளிர் உலக கோப்பை நடக்குமா? நியூசி. கிரிக்கெட் வாரியம் இரண்டு வாரங்களில் முடிவு

கிறைஸ்ட் சர்ச்: நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் திட்டமிட்டபடி நடத்தப்படுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து, இன்னும் 2 வாரங்களில் முடிவெடுக்கப்படும் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பரில் நடைபெறுவதாக இருந்த ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் 2021 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பெண்களுக்கான ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா பீதி இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இந்த தொடர் மட்டும் எப்படி நடைபெறும் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்தான் பரிந்துரைக்க வேண்டும் என்பதால், அதன் அடிப்படையிலேயே ஐசிசி இறுதி முடிவெடுக்கும். மற்ற நாடுகளைவிட நியூசிலாந்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. அங்கு உள்ளூர் குளிர்கால போட்டிகள் மீண்டும் நடக்கத் தொடங்கி இருந்தாலும், வெளிநாடுகளிலிருந்து வீரர்கள் வருவதற்கான அனுமதி இல்லை. எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மகளிர் உலகக் கோப்பை போட்டிக்கு ஏற்கனவே இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என 5 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

எஞ்சிய 3 நாடுகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப்போட்டி இலங்கையில் இம்மாதம் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது. தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்ற பிறகே உலகக்கோப்பை போட்டிகள் நடத்துவதற்கான சூழல் உருவாகும். இந்நிலையில் நியூசி. கிரிக்கெட் வாரியத் தலைவர் கிரெக் பார்க்ளே, ‘நியூசிலாந்தில் நிலைமை மேம்பட்டிருக்கிறது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து அணிகள் வருவதற்கான சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. எனவே நிலைமையை இன்னும் இரண்டு வாரங்களில் கண்காணித்து அதற்கேற்ப முடிவுகள் எடுக்கப்படும். எப்படி இருந்தாலும் போட்டி நடைபெறுமா இல்லையா என்பது விரைவில்... அதாவது 2 வாரங்களில் தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Women's World Cup ,New Zealand ,Cricket Board , Women's World Cup, will it happen? New Zealand. Cricket Board, two weeks, results
× RELATED திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா?