×

டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசை பென் ஸ்டோக்ஸ் நம்பர் 1

துபாய்: மான்செஸ்டரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், இங்கிலாந்து 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்ய, வெஸ்ட் இண்டீஸ் 287 ரன்னுக்கு சுருண்டது. 182 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 312 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 70.1 ஓவரில் 198 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்சில் 176 ரன், 2வது இன்னிங்சில் 78* ரன் மற்றும் 3 விக்கெட் (1+2) கைப்பற்றிய ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டெஸ்ட் இதே மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்நிலையில், ஐசிசி நேற்று வெளியிட்ட ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளிய ஸ்டோக்ஸ் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தினார். ஸ்டோக்ஸ் (497), ஹோல்டர் (459), ஜடேஜா (397) முதல் 3 இடங்களில் உள்ளனர். மேலும், டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஸ்டோக்ஸ் முதல் முறையாக 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளதுடன் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ரேட்டிங் புள்ளிகளையும் (827) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Ben Stokes No. 1 ,Test ,Ben Stokes , Test all-rounder, ranking, Ben Stokes, No. 1
× RELATED டி20 உலக கோப்பை தொடரில்...