×

சரிந்த பொருளாதாரத்துக்கு நம்பிக்கை தந்த வேளாண்மை ஊரடங்கிலும் டிராக்டர் விற்பனை அமோகம்

சென்னை: விவசாயத்தை அதிகம் சார்ந்துள்ள மாநிலங்களின் ஜிடிபி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிய விவசாய துறை, பொருளாதார ஏற்றத்துக்கு உதவியுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் ஊரடங்கு காலத்திலும் ‘டிராக்டர்’ விற்பனை ஓரளவு கைகொடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளின் சுகாதாரத்துக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளால் இந்தியாவில் தொழில்துறைகள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டன.

இவற்றில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்குள், கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்துறையும் நிர்மூலமாகியுள்ளது. குறிப்பாக சுற்றுலா, ஓட்டல், நிலக்கரி, பொருள்கள் உற்பத்தி, பெட்ரோலியம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், தொலைத்தொடர்பு, நிதிச் சேவை உள்ளிட்ட பல துறைகளும் முடங்கி கிடப்பதால் துறை ரீதியான வேலையின்மை, பல லட்சம் கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) கூறுகிறது. இவைதவிர, விமான போக்குவரத்து துறை, ஆட்டோமொபைல், கட்டுமானம், ஏற்றுமதி, குறு, சிறு நடுத்தர துறை நிறுவனங்களும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சர்வதேச நாடுகளில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் சுமார் 50 - 60 சதவீத ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் வேளாண் துறையில் பயன்படுத்தப்படும் டிராக்டர் விற்பனையைப் பார்க்கும்போது, ஊரடங்கால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிகமாக டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. ஜூன் 2019-ஐ விட 23 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் உள்ளது. விவசாயிகளுக்கு டிராக்டரின் தேவை அதிகமாக இருப்பதால், விற்கப்படாத டிராக்டர்களைப் பற்றி அதன் உற்பத்தியாளர்கள் கவலைப்படவில்லை. ஆனால், டிராக்டர் உதிரி பாகங்கள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை நீடிக்கிறது.

இதுகுறித்து பிரபல வாகன உற்பத்தி தொழில் நிறுவனத்தினர் கூறுகையில், ‘ஊரடங்கு காலத்திலும் டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஏனெனில் கிராமப்புறங்களில் மக்கள் தொற்றுநோயால் பெரியளவில் பாதிக்கவில்லை. மற்ற தொழில்களை காட்டிலும், விவசாயம் நன்றாக நடந்து கொண்டுதான் உள்ளது. ஊரடங்கு இருந்தபோதும் சரியான நேரத்தில் பருவமழை பெய்துள்ளது. அதனால், விவசாயிகள் பயிர் விதைப்பு பணியில் டிராக்டர்களின் பயன்பாட்டை தீவிரப்படுத்தி வருகின்றனர். டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு சந்தையும் ஜூன் மாதத்தில் 15.4 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

இருசக்கர வாகன தேவை வழக்கம் போல் கிராமபுறங்களில் அதிகமாக உள்ளது. ஊரடங்குக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 60 - 80 சதவீதம் அளவிற்கு உள்ளது. ஜூன் மாதத்தில் இருசக்கர வாகனம் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருந்தது. உதாரணமாக, ஹீரோ மோட்டோகார்ப் அதன் விற்பனை மே மாதத்தில் 1,12,682 ஆக இருந்தது. ஆனால், அதே ஜூன் மாதத்தில் 4,50,744 ஆக இருந்தது. ஊரடங்குக்கு மத்தியில் கடந்த இரண்டு மாத காலத்திற்குள், சுமார் 60 சதவீதம் அளவிற்கு வர்த்தகத்தில் மீட்சி ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Collapsed economy, optimism, agriculture, tractor sales, craze
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...