* பூமி பூஜையின் போது கோயில் கருவறைக்குள், வெள்ளியால் செய்யப்பட்ட 5 செங்கற்கள் வைக்கப்பட உள்ளன.
* இந்த கற்கள், இந்து நம்பிக்கையின்படி பஞ்சபூதங்களை குறிப்பதற்காக வைக்கப்படுகிறது.
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கும்படி அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ள, ‘ஸ்ரீராம் ஜென்மபூரி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் இது, பூமி பூஜையை அடுத்த மாதம் 5ம் தேதி நடத்த, முடிவு செய்துள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ராமர் கோயில் போராட்டத்தை முன்னின்று நடத்திய பாஜ மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, விஜய் கத்யார் போன்றவர்களுக்கும் அழைப்பு விடுக்க, தீர்த்த ஷேத்ரா முடிவு செய்துள்ளது. இவர்கள் அனைவரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு, வழக்கை சந்தித்து வருகின்றனர்.