×

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டால் நசுக்கி விடுவேன்: ரஷ்யா, சீனாவுக்கு ஜோ பிடென் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் சில அந்நிய நாடுகளின் தலையீடு இருப்பதாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் எச்சரித்துள்ளார். அடுத்த அதிபராக தான் பதவியேற்றால், தலையிட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு துறையும் விசாரணை நடத்தியது. இந்த குற்றச்சாட்டை டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் மறுத்தனர். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடக்க உள்ளது.

இதில், டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் (77), நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பேசியதாவது:
2016ல் பார்த்த அதே சம்பவம் மீண்டும் அரங்கேறுகிறது. இம்முறை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் பிற அந்நிய நாடுகள் நமது ஜனநாயகத்திலும், நமது தேர்தல் நடைமுறைகளிலும் தலையிடுவதற்காக ஆயத்தமாகி வருகின்றன. இதுதொடர்பாக நம்பத்தகுந்த உளவு தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் தேர்தலில் தலையிட விடாமல் தடுப்பதற்கான சிறந்த வழி, எந்த நாடு தலையிட முயற்சிக்கிறது என்பதை வெளிஉலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் டிரம்ப் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது.

நான் அடுத்த அதிபரானால், நமது தேர்தல் நடைமுறையில் தலையிடும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். எனது முழு அதிகாரத்தை பயன்படுத்தி பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதிப்பேன். தலையிட்ட நாடுகள் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார். இதற்கு முன் அதிபர் டிரம்ப்பும் இதே போன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார். அதிபர் தேர்தலில் சீனா தலையிடுவதாகவும், ஜோ பிடென் வெற்றி பெற வைக்க சீனா முயற்சிப்பதாகவும் கூறும் அவர், ரஷ்யாவின் தலையிடு இல்லை என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

* 11 சீன நிறுவனங்களுக்கு தடை
ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை மக்களான உய்குர் முஸ்லீம்கள் மீது சீன அரசு பல்வேறு மனித உரிமை மீறல்களை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அவர்களை தனிமை முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்கிறது. ஆண்கள், பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்து இன அழிப்பில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக சமீபத்தில் 4 சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்த நிலையில் தற்போது 11 சீன நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.


Tags : election ,China ,Russia ,US ,Joe Biden , US presidential election, if interfered, will be crushed, Russia, China, Joe Biden, stern warning
× RELATED அமெரிக்கத் தேர்தல் குறித்து தவறான...