ஊரடங்கால் வேலையின்றி மக்கள் தவித்து வரும் நிலையில் கோயில்களுக்கு சொந்தமான வீடு கடை வாடகை கேட்டு நெருக்கடி: செயல் அலுவலர்கள் நோட்டீஸ் விநியோகம்; வாடகைதாரர்கள் அதிர்ச்சி

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடைகளுக்கு வாடகை கேட்டு செயல் அலுவலர்கள் நோட்டீஸ் விநியோகித்து வருவது வாடகைதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள் பலர் வேலையில்லாததால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வேலை மற்றும் வருவாய் இல்லாத சூழலில் பொதுமக்களிடம் வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி தரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில் தற்போது, கோயில் குடியிருப்பு மற்றும் கடைகளில் வாடகை வசூலிக்குமாறு உயர் அதிகாரிகள் கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்தந்த கோயில் நிர்வாகம் வாடகை செலுத்த கோரி கோயில் அலுவலர்கள் குடியிருப்போர் மற்றும் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, 3 மாத வாடகை ஒரே தவணையில் செலுத்தவும் வாடகை தாரர்களுக்கு கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தான் மாநிலம் முழுவதும் மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டு வரும் சூழலில், வாடகை கேட்டு அறநிலையத்துறையே நெருக்கடி தருவது வாடகைதாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>