×

கொரோனா காலத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்: சென்னையில் மு.க.ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்பு

சென்னை: கொரோனா காலத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லம் முன்பு மு.க.ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மின் கணக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் மாநிலம் முழுவதும் மின் கணக்கீடு செய்யப்பட்டது. அப்போது, 4 மாதங்களுக்கும் சேர்த்து மின் கணக்கீடு எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்கட்டணம் பல மடங்கு அதிகமாக இருந்தது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மின்வாரியம் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிலேயே இருந்ததால் மின் கட்டணம் அதிகமாகி உள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கும், பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் முறையாக மின் கணக்கீடு செய்ய வேண்டும், மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 16ம் தேதி காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மின் கட்டணம் “ரீடிங்” எடுத்ததில் உள்ள குழப்பத்தை நீக்கி, மின் நுகர்வோருக்குச் சாதகமான முறையில் கணக்கிட்டு ஊரடங்கு கால மின்கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அப்படிக் குறைக்கப்பட்ட மின் கட்டணத்தை எளிய மாத தவணையாகச் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 21ம் தேதி(நேற்று) தமிழகம் உள்ள அனைத்து வீடுகளின் முன்பும் கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி நேற்று காலை தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி கருப்பு கொடியேற்றி தங்களது வீடுகளின் முன்பாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அவர் கருப்பு சட்டை அணிந்து ஒரு கையில் கருப்புக்கொடி ஏந்தியும், மற்றொரு கையில் “ஷாக் அடிப்பது மின்சாரமா, மின்கட்டணமா” என்ற பதாகையை கையில் ஏந்திய படி கண்டன குரல் எழுப்பினார்.

அப்போது, மு.க.ஸ்டாலின், “ கொள்ளையடிக்காதே கொள்ளையடிக்காதே, கொரோனா காலத்தில் கொள்ளையடிக்காதே, குழப்பாதே குழப்பாதே ரீடிங் எடுப்பதில் குழப்பாதே. வயிற்றில் அடிக்காதே வயிற்றில் அடிக்காதே என்று முழக்கம் எழுப்பினார். அண்ணா அறிவாலயம் முன்பு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.செல்வம் எம்எல்ஏ, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, பகுதி செயலாளர் மா.பா.அன்புத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிஐடி காலனியில் உள்ள தனது வீட்டின் முன்பாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி துணை செயலாளர்கள் தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் வாயிலில் மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பகுதிச் செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன், அடையாறு பாஸ்கர் சிறு,குறு தொழில் முனைவோர் சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை ஓட்டேரி செல்லப்பா முதலி தெருவில் உள்ள வீட்டு முன்பு சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எழும்பூரில் எம்எல்ஏ ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. திமுக பகுதி செயலாளர் ஏழுமலை தலைமையில் தி.நகரில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன், மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, வட்ட செயலாளர் பி.மாரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.நகர் கிழக்கு பகுதி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் ராயபுரம் சூரிய நாரயணன் தெருவில் உள்ள அறிவகம் திருமண மண்டபம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர்கள், சுரேஷ், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லம் முன்பு பகுதி செயலாளர் மா.பா.அன்புத் துரை தலைமையில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிந்தாதிரிப்பேட்டையில் பகுதி செயலாளர் எஸ்.மதன் மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மகாகவி பாரதி நகர் திருவள்ளுவர் நகரில் பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் குடும்பத்தினருடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதே போல நீலாங்கரையில் உள்ள தனது வீட்டின் முன்பாக தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியனும், சென்னை சூளைமேட்டில் உள்ள தனது இல்லத்தின் முன்பாக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கலைஞர் நகரில் உள்ள திருநகர் இல்லத்தின் முன்பு, திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் கிழக்கு பகுதியில் வண்ணாரப்பேட்டை தபால் அலுவலகம் அருகே வட சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்றனர். அது மட்டுமல்லாமல் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தானாக முன்வந்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

* பொதுமக்களும் ஆர்வம்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல்  பதிவில் கூறியிருப்பதாவது:
கொரோனா காலத்தில் மக்களை காக்கத் தவறிய மாநில அரசு, மின் கட்டணம் என்ற பெயரால் அநியாயக் கொள்ளை நடத்திக் கொண்டு இருக்கிறது. இது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானவர்களுக்கு வேலை இல்லை, ஊதியம் இல்லை; தொழிலும் இல்லை; வருவாயும் இல்லை. அதை மனதில் வைத்து மின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால் முதல்வர் பழனிசாமி அரசு மின் கட்டணத்தை அளவுக்கு மீறி அதிகப்படுத்தி, தன் பங்குக்கு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது. இத்தகைய மின் கட்டணக் கொள்ளையை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (நேற்று) காலையில் கண்டன முழக்கம் எழுப்பிக் கண்டித்தோம். கருப்புக் கொடி தாங்கி தமிழக அரசுக்கு எதிர்ப்பைக் காட்டினோம். திமுகவினர் மட்டுமல்ல, ஏராளமான பொதுமக்களும் இதில் பங்கெடுத்தார்கள். இதன் பிறகாவது மின் கட்டணத்தை ஒழுங்குபடுத்துங்கள். குறையுங்கள்; சலுகை காட்டுங்கள்; மக்கள் மீது கருணை வையுங்கள் என்று அதிமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Tags : protests ,Tamil Nadu ,DMK ,MK Stalin ,Corona ,Chennai , Corona period, electricity bills, high collections, condemnation, Tamil Nadu, DMK protest, Chennai, MK Stalin, participation
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...