×

‘செல்போனில் மக்கள் குறைதீர்வு கூட்டம்’ பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் முதியவர் தீக்குளிக்க முயற்சி: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை: பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைெபறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு மாற்று ஏற்பாடாக செல்போன் வழி குறைதீர்வு தீர்வு கூட்டம், கடந்த 5 வாரங்களாக கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்து வருகிறது. அதன்படி, 6369860616, 6383471563 6383929127, 9025000590 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து 5வது வாரமாக நேற்று செல்போன் வழி மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஒ ரத்தினசாமி உட்பட மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, குறைகளை தெரிவிக்க அளிக்கப்பட்டிருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு,  உதவித்தொகை, அரசு கடனுதவி, குடிநீர் தேவை உள்ளிட்ட 247 பேர் தங்களது  கோரிக்கைகளை தெரிவித்தனர். அதன்பேரில் உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே காத்திருந்த முதியவர் ஒருவர், திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிவந்து முதியவரை தடுத்து நிறுத்தி, அவரிடமிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், செங்கம் தாலுகா சொர்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன்(85) என்பது தெரியவந்தது. மேலும், தனக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளதாகவும், அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாகவும், தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை மூன்று மகன்களுக்கும் பாகப்பிரிவினை செய்து எழுதிக் கொடுத்துவிட்டதாகவும், அதன் பிறகு தன்னை கவனிக்காமல் மகன்கள் கைவிட்டு விட்டனர் என தெரிவித்தார் தற்போது, என்னுடைய மனைவியும் இல்லை.

இதனால் ஆதரவற்று சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறேன். எனவே, மகன்களுக்கு எழுதிக்கொடுத்த நிலத்தை மீண்டும் என்னுடைய பெயருக்கு மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். அவருக்கு ஆறுதல் சொன்ன போலீசார், தீக்குளித்தல் போன்ற தவறான நடவடிக்கைகளை செய்யக்கூடாது என எச்சரித்தனர். அவரது கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office ,Thiruvannamalai Collector ,children ,meeting , ‘Cellphone, People’s Grievance Meeting, Children, Elderly, Attempt to Arson, Thiruvannamalai, Collector’s Office
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...