×

ஊரடங்கால் களையிழந்த ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை வெறிச்சோடியது

ராமேஸ்வரம்: கொரோனா ஊரடங்கால் ஆடி அமாவாசையான நேற்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், ஆடி அமாவாசையான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம், திருப்புல்லாணி தர்ப்பசயணம், தேவிப்பட்டினம் நவபாஷானம் உள்ளிட்ட புண்ணிய தல கடற்கரைகளில் பக்தர்கள் தீர்த்தமாட மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு உச்சிப்புளி வாலாந்தரவை முதல் பாம்பன் சாலைப்பாலம் வரை 11 இடங்களில் சிறப்பு செக்போஸ்ட் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் நகர் பகுதி, பேருந்து நிலையம், கார் பார்க்கிங், நான்குரத வீதிகள், அக்னிதீர்த்த கடற்கரை ஆகிய பகுதியில் சட்டம் ஒழுங்கு மற்றும் மரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் வெளியூர் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் வருகை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரை பக்தர்கள் இல்லாமல் நேற்று வெறிச்சோடி கிடந்தது. உள்ளூர்வாசிகள் சிலர் மட்டும் அக்னிதீர்த்த கடலின் வடக்கு சங்குமால் பகுதியில் குளித்து விட்டு சென்றனர். கோயிலை சுற்றிலும் நான்கு ரதவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னைவாசிகள்விதிமீறி நீராடல்?
ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடல் வடக்கு பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னையை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் விதிமீறி தீர்த்தமாடி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இறப்பு என காரணம் கூறி இ.பாஸ் பெற்று, கடந்த 18ம் தேதி சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கார்களில் வந்ததாகவும், இங்கு லாட்ஜில் 2 நாள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று அதிகாலை கடலில் நீராடிவிட்டு இங்குள்ள புரோகிதர் ஒருவரின் வீட்டில் சடங்குகள் செய்துவிட்டு காலை 9.30 மணியளவில் சென்னை புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது போலீசுக்கு தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : Audi Amavasaya ,beach ,Rameswaram Agni Tirtha , Curfew, Audi Amavasai, Rameswaram, Agni Tirtha Beach
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...