×

டெல்டா மாவட்டத்தில் கொரோனாவால் களையிழந்த ஆடி அமாவாசை: காவிரி கரைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் கொரோனாவால் ஆடி அமாவாசை களையிழந்து காணப்பட்டன. காவிரி கரைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் மக்கள் தவித்தனர்.ஆடி அமாவாசை தினத்தில் மூதையர்கள் மற்றும் பெற்றோரை இழந்தவர்கள், அவர்களை நினைவு கூர்ந்து வழிபட்டு அவர்களுக்கு நீர்க்கடன் செய்ய வேண்டிய முக்கியமான நாளாகும். மறைந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையவும், ஆசி கிட்டவும் ஒவ்வொரு ஆடி அமாவாசை தினத்திலும் அவர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் திதி கொடுக்க தவறியவர்கள் ஆடிஅமாவாசையின் போது கொடுத்தால் அது அந்த வருடத்தின் அனைத்து அமாவாசையிலும் திதி கொடுத்ததற்கு ஈடானது என்பது ஐதீகம்.

ஆடிஅமாவாசை தினத்தன்று டெல்டாவில் காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக இருந்தது. இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் காவிரி கரைகளில் திதி, தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி கரைகளில் மக்கள் திதி கொடுக்காமல் களையிழந்து காணப்பட்டது. ரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பார்கள். ஆனால் இந்தாண்டு தர்ப்பணம் கொடுக்க தடை விதித்து போர்டு வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தன. அம்மாமண்டபத்திற்கு திதி கொடுக்க மக்கள் வரமுடியாதபடி மாம்பழச்சாலை பகுதியில் போலீசார் பேரிகார்டுகள் வைத்து இருந்தனர்.

வசதி படைத்தவர்கள் வீட்டில் புரோகிதர்களை வரவழைத்து தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் கரைத்தனர். நாகை: நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், பூம்புகார் ஆகிய கடற்கரைகளில் தர்ப்பணம் செய்யவோ, கடலில் குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் காசிக்கு நிகராக விளங்கும் காமேஷ்வரம் கடற்கரை, கோடியக்கரை கடற்கரை, வேதாரண்யம், பூம்புகார், நாகை உள்ளிட்ட கடற்கரைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தர்ப்பணம் செய்ய கடற்கரை வந்த பொதுமக்களை போலீசார் அனுமதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பினர். இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பூஜை பொருட்களுடன் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் மற்றும் கோடியக்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கடலில் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்து, திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை வழிபடுவது காலங்காலமாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதையொட்டி நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு புனித நீராட தடைவிதிக்கப்பட்டது. வேதாரண்யம் கோடியக்கரை தீர்த்த கட்டத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் போலீசார் நிறுத்தப்பட்டு புனித நீராடலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஏராளமான பக்தர்கள் திரும்பி சென்றனர்.

புதுக்கோட்டை:  இந்த ஆண்டு கோடியக்கரை கடலில் பொதுமக்கள் புனித நீராக மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், ஆடி அமாவாசை நாளான நேற்று மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தகவல் தெரியாமல் கோடியக்கரைக்கு வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கோடியக்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மணமேல்குடி கோடியக்கரையில் புனித நீராட முடியாத பலர் நாகுடி பகுதியில் கல்லணைக் கால்வாயில் வந்த காவிரி நீரில் புனித நீராடினர்.

திருவாரூர் கமலாலய குளம் மூடல்
திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கமலாலயக்குளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நேற்று திதி கொடுக்கும் இடமானது பூட்டப்பட்டதன் காரணமாக முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இதனையடுத்து மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் திதி கொடுத்து சென்றனர்.

துலாக்கட்ட காவிரியில் குவிந்த மக்கள்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் கொடுக்க அதிக அளவில் கூட்டம் கூடியது. சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகரித்திருந்தது. போலீசார் எவ்வளவு எச்சரித்தும் பொதுமக்கள் கேட்கவில்லை. ஏற்கனவே மயிலாடுதுறை பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆரம்பித்துள்ளது, இந்த நேரத்தில் அரசின் அறிவிப்பை மதிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பக்தர்கள் முக கவசத்துடன் தர்ப்பணம்
காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் ஸ்தலமாக குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் உள்ளது. இச்சிறப்பு மிக்க கோயில் எதிரே காவிரிக் கரையோரம் கடம்பன் துறை உள்ளது. இங்கு நேற்று ஆடி அமாவாசையையொட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள் என்பதால் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் நகராட்சி ஒலிபெருக்கி மூலம் வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் பாதுகாப்பு உடன் சமூகஇடைவெளிவிட்டு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர். இந்நிலையில் கோரோனா பீதியால் ஆற்றுக்குள் பந்தல் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து குறைந்த அளவு பக்தர்களே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

அப்பர் கயிலை காட்சி விழா இல்லாமல் வெறிச்சோடிய திருவையாறு
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதினத்துக்கு சொந்தமான ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திருவையாறு காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். பின்னர்ஐயாறப்பரை தரிசித்து விட்டு செல்வர்.

அன்றைய தினம் மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு ஐயாறப்பர் ஆலய தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி நடைபெறும். இதனால் அன்றைய தினம் திருவையாறே விழா கோலமாக காட்சியளிக்கும்.
இந்தாண்டு ஆடி அமாவாசை அப்பர் கயிலைக்காட்சி விழா நேற்று நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவித்து கோயில்களில் திருவிழாக்கள் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று காலை காவிரி ஆற்று புஷ்யமண்டப படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க மக்கள் வரவில்லை. இருப்பினும் கோயிலில் இருந்து குருக்கள் மட்டுமே தீர்த்தவாரி நடத்தினர்.

தடையை மீறி தர்ப்பணம்
ரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் இடங்களில் பொதுமக்கள்
கூட கூடாது என அறிவித்திருந்த நிலையில் முசிறி காவிரி ஆற்றில் பாதுகாப்பின்றி திதி கொடுத்து தர்ப்பணம் செய்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி ஆற்றில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் ஏனோ இதனை கண்டுகொள்ளாமல் காற்று வாங்க வந்தது போல் நின்று கொண்டிருந்தது பார்ப்போரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

Tags : banks ,Cauvery ,Corona ,Audi , Delta District, Corona, Audi New Moon, Cauvery Rivers
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி