×

கோயில் விழாக்கள் முடங்கியதால் விலைபோகாத வண்ண வேட்டிகள்: ரேஷன் கடைகளில் விற்க அரசுக்கு வேண்டுகோள்

குமாரபாளையம்: கோயில் விழாக்கள் முடங்கியதால் வண்ண வேட்டிகள் விலைபோகாமல் தேங்கிக் கிடக்கின்றன. ரேஷன் கடைகள் மூலம் வழங்க அரசே கொள்முதல் செய்து நெசவாளர்களை வாழ வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆடி மாதம் பிறந்தால் அம்மன் கோயில்களில் களைகட்டும். எங்கு பார்த்தாலும் திருவிழாக்கள்தான். கோயில் திருவிழாக்களையொட்டி மஞ்சள் வேட்டிகள் அதிகளவில் விற்பனையாகும். இந்த வருடம் கொரோனாவால் ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆவனி மாதம் துவங்கினால் ஐயப்பன் சீசன் துவங்கிவிடும். ஆவணியிலிருந்து தை மாதம் ஜோதி வரை சீசன் களை கட்டுவதால் கருப்பு மற்றும் காவி வேட்டிகளின் விற்பனை அமோகமாக இருக்கும்.

இதேபோல், தை மாதம் முருக பக்தர்களுக்கான பச்சை வேட்டிகள் சக்கை போடு போடும். காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகளால் மாசி மாதம் மஞ்சள் வேட்டிகளின் விற்பனை உச்சத்தை தொடும். இந்த பண்டிகை காலங்களை மையமாக வைத்து பல வண்ண வேட்டிகள் உற்பத்தி செய்வதில் மட்டுமே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 50க்கும் மேற்பட்ட டெக்ஸ்டைல்கள் இயங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 4 மாதங்களாக கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. கோயில் திருவிழாக்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் திருவிழாக்களும் தப்பவில்லை. இதனால், வண்ண வேட்டிகளை உற்பத்தி செய்யும் ஜவுளி உற்பத்தியாளர்கள், உற்பத்தி செய்த வேட்டிகளை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  

குமாரபாளையத்தில் மட்டும் 2 கோடி மதிப்பிலான வண்ண வேட்டிகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. முடங்கிக் கிடக்கும் இந்த மூலதனத்திற்கு வட்டி கட்ட முடியாமலும், தேங்கிய வேட்டிகளை விற்பனை செய்ய முடியாமலும் உற்பத்தியாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உழைப்பை நம்பி சுயமாக தொழில் செய்து வந்த இந்த உற்பத்தியாளர்கள் தேங்கிய ஜவுளிகளை அரசு கொள்முதல் செய்து கொண்டால் தான் இழப்பிலிருந்து மீளமுடியும் என்ற நெருக்கடியில் உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பயனீட்டாளர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக கோயில் விழாக்களையும் பண்டிகை பருவங்களையும் அரசு தடை செய்துள்ளது.

திருவிழா கலைஞர்களை போலவே வண்ண வேட்டி உற்பத்தியாளர்களும் மீளமுடியாத நிலையில் சிக்கி திணறி வருகின்றனர். வண்ண வேட்டி உற்பத்தியில் பல கோடி ரூபாயை முடக்கியுள்ள குமாரபாளையம் உற்பத்தியாளர்களை வாழ்விக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். உற்பத்தியாளர்களிடம் உள்ள வண்ண வேட்டிகளை அரசே கொள்முதல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி அங்குள்ள ரேஷன் கடைகளில் பொங்கல், தீபாவளி, தசரா, ஓணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார். கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையினை போலவே தேங்கிக் கிடக்கும் வண்ண வேட்டிகளையும் கொள்முதல் செய்து, உற்பத்தியாளர்களின் துயர் துடைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : temple festivals ,ration shops ,government , Temple ceremonies, color cutters, ration shops
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...