×

சுடுகாட்டில் மின்விளக்கு வசதி இல்லாததால் வாகன வெளிச்சத்தில் சடலத்தை அடக்கம் செய்யும் அவலம்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சியில் உள்ள ஜெய்பீம் நகர் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஏரிக் கரையை ஒட்டி சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்ல பல ஆண்டுகளாக மின்விளக்கு மற்றும் சாலை வசதி இல்லாமல் இருக்கிறது.  இதனால், இரவு நேரங்களில் சடலங்களை அடக்கம் செய்ய எடுத்து செல்லும்போது முட் செடிகள், கற்கள், விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.  

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த திருப்பத்தூர் பஸ் டிப்போவில் பணிபுரியும் அரசு பேருந்து கண்டக்டர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக  கடந்த 18ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து, அவரது சடலத்தை சென்னையிலிருந்து நேற்று முன்தினம் மாலை கொண்டு வந்தனர். பின்னர், இரவு சுடுகாட்டில் அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். அப்போது, அங்கு மின்விளக்கு இல்லாததால், அவர்கள் கொண்டு சென்ற வாகனத்தின் முன் விளக்கு வெளிச்சத்தில் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று பெரும் சிரமங்களுக்கிடையே சடலத்தை அடக்கம் செய்தனர்.

எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் சாலை மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : crematorium , Fire, lamp, corpse
× RELATED 30 குண்டுகள் முழுங்க...