×

முக்கொம்புக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து இடிந்து நிற்கும் பவர் ஹவுஸ்க்கு சவுக்கால் முட்டு கொடுத்த அவலம்

திருச்சி,: திருச்சி முக்கொம்புவில் பவர் ஹவுஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திடீரென சரிந்து விழும் நிலையில் உள்ளதால் சவுக்கு கட்டைகள் கொண்டு கான்கிரீட்டுக்கு முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இடிந்தால் டெல்டா பாசனத்துக்கு சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் பெருக்கெடுத்து கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணைக்கு வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு திறந்து விடப்பட்டது. முக்கொம்பு மேலணையில் இருந்து இரண்டாக பிரிந்து செல்கிறது. ஒரு பிரிவு காவிரி ஆறாக டெல்டா பகுதிக்கும், மற்றொரு பிரிவு திருச்சி கொள்ளிடம் மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆறாக (உபரி நீராக) செல்கிறது.

காவிரி ஆற்றைவிட, கொள்ளிடம் ஆற்றில்தான் தேவைக்கு அதிகமான நீரை உபரியாக திறந்து விடுவது வழக்கம். இங்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் தடுப்பணைகளில் உள்ள ஷட்டர்களை ஏற்றி இறக்க மின் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ள கட்டிடம் (பவர் ஹவுஸ்) 1977ம் ஆண்டில் கட்டப்பட்டது. 43 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் 100 கிலோ வாட் மின் திறன் கொண்ட மின் சாதனங்கள் மற்றும் 40 கிலோ வாட் மின் திறன் கொண்ட ஜெனரேட்டர் உள்ளிட்டவை உள்ளன. இந்த கட்டிடம் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில், சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளது.

இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த பவர் ஹவுஸ் கட்டிடத்தின் உள்ளே மேற்கூரை சரிந்துள்ளதால், பல இடங்களில் சவுக்கு கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்துள்ளனர். இந்த பவர் ஹவுஸ் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்து விட்டால், ஷட்டர்களை ஏற்றி இறக்க முடியாது. இதனால் நீரை ஒழுங்கு படுத்தி பாசனத்துக்கு வழங்க இயலாது போகும். அதிக அளவில் வெள்ளம் வந்தால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து பொதுப்பணித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர். ஏற்கனவே முக்கொம்பு கொள்ளிடத்தில் 2018 ஆகஸ்ட் மாதம் அதிக வெள்ளத்தால் 9 மதகுகள் உடைந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : trident , Trident, Power House
× RELATED இந்தியாவில் முதல்முறையாக 3 ரயில்களை...