×

பள்ளிகளைத் திறப்பதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது மாநில அரசுகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா அச்சம் தணிந்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை. மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்த நிலையில், இன்றைக்குள் அதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பள்ளிகளை ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மாதத்தில் திறக்கலாம் என்றும், இதுபற்றி பெற்றோரின் விருப்பங்களை அறிந்து முடிவெடுக்கும் படியும் மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? விரைந்து முடிவெடுக்கும்படி மாநில அரசுகளை கட்டாயப்படுத்துகிறது? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் இன்னும் குறையவில்லை; மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மத்திய அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு, பள்ளிகள் திறக்கும் தேதியை மாநில அரசுகள் முடிவு செய்தால் கூட, அந்த தேதிகளில் பள்ளிகளை திறக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் கூட மத்திய அரசு தலையிட்டு, அனைத்து அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக அமையும். மாறாக, பள்ளிகளை எப்போது திறக்கலாம்? வகுப்புகளை எந்த முறையில் நடத்தலாம்? என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பன குறித்து உள்ளூர் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.


Tags : government ,schools ,Ramadas ,state governments , In opening schools, the central government, urgency, the state government, to give power, Ramadas insistence
× RELATED அக்.5ம் தேதி பள்ளிகளை திறக்க அரசு ஆலோசனை: சுழற்சி முறையில் வகுப்பு