×

கல்வி கட்டணத்தை முழுவதுமாக செலுத்த நெருக்கடி தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை: மறைமலைநகரில் பரபரப்பு

செங்கல்பட்டு: நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கட்டாயப் படுத்திய தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதனால், மறைமலைநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் வீட்டிலேயே உள்ளனர். இதற்கிடையில், ஊரடங்கு காரணத்தல் ஏராளமான மக்கள், வருமானம் இல்லாமல் உள்ளனர். பள்ளி திறந்தால், மாணவர்களுக்கான கட்டணம் உள்பட பல்வேறு செலவுகளுக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.

இதைதொடர்ந்து, பள்ளிகள் ஆகஸ்ட் மாதம் திறக்கலாம். கல்வி கட்டணத்தில் 40 சதவீதம் மட்டும், பள்ளி நிர்வாகம் வசூலிக்க வேண்டும். மீதி தொகையை தவணை முறையில் பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் செயல்படும் தனியார் பள்ளியில், மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை முழுவதுமாக செலுத்த கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று காலை பள்ளிக்கு சென்றனர். அங்கு பள்ளியை முற்றுகையிட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், கல்விக் கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும், பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். கொரோனா தொற்று காரணமாக நாங்கள் வருவாய் இழந்து இருக்கிறோம். இந்தவேளையில், கல்விக் கட்டணத்தை முழுவதுமாக செலுத்த வேண்டும் என பற்றி நிர்வாகம் நெருக்கடி கொடுக்கிறது என வேதனையுடன் கூறினர். இதையடுத்து பள்ளி முதல்வர், போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமரசம் பேசினார்.

அப்போது, அதற்கு, முழு கட்டணமும் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்பு மற்றும் புத்தகம் வழங்கப்படும் என முதல்வர் கூறினார். அதற்கு, முழு கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் கலைந்து சென்றனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் கல்வி கட்டணத்தை உடனடியாக முழுவதுமாக கட்டமுடியாது. இதற்கு, தமிழக அரசு சார்பில், பள்ளி நிர்வாகத்துக்கு உரிய அறிவிப்பை வெளியிடவேண்டும். இதே நிலை தொடர்ந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Tags : private school ,crisis ,Parents ,Maraimalai , Tuition fees, private school, parental siege, in Maraimalai, commotion
× RELATED பிரதமர் மோடி வரும் நிலையில் தனியார்...