×

கேரள தங்க ராணி சொப்னாவுக்கு 20 ஹவாலா கும்பல்களுடன் தொடர்பு: பகீர் தகவல்கள் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கி உள்ள சொப்னாவுக்கு 20 ஹவாலா கும்பல்களுடன் தொடர்பு இருப்பது உள்ளிட்ட பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவனந்தபுரம் தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்து வருகிறது. சுங்க இலாகாவினரின் விசாரணையில் கைதாகி உள்ள சரித்குமார் தவிர, சொப்னா உள்பட மற்ற 12 பேருக்கும் ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கடத்தும் தங்கத்தை நேரடியாகவோ அல்லது வேறு ஆட்கள் மூலமாகவோ விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த கடத்தலில் 20 ஹவாலா கும்பல்களுக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் தான் பணம் சப்ளை செய்து வருகின்றனர். சரித்குமாரிடம் இருந்து தங்கத்தை வாங்கும் சந்தீப் நாயர் அதை ரமீஸிடம் ஒப்படைப்பாராம். இவர் அப்து, முகமது ஷாபி, செய்யது அலவி, ஜமால் முகமதிடம் கொடுப்பார். இவர்கள் ஹவாலா கும்பலுக்கு தங்கத்தை பங்கிட்டு கொடுத்து வந்தனர் என்று தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் அப்து தவிர மற்ற அனைவரும் தங்கத்தை யாருக்கு விற்பனை செய்கிறோம் என்ற விவரத்தை சுங்க இலாகாவிடம் தெரிவித்து விட்டனர். அப்து மூலம் இதுவரை 78 கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதை யார் யாருக்கு விற்றார் என்பதை தெரிவிக்கவில்லை.

திருவனந்தபுரத்தில் உள்ள சொப்னாவின் வீட்டில் நடக்கும் ஆலோசனை கூட்டங்களில் சிவசங்கர் ஐஏஎஸ் பலமுறை பங்கேற்றுள்ளார். 4 கூட்டங்களில் சந்தீப் நாயரும், சரித்குமாரும் பங்கேற்றுள்ளனர். ஒருமுறை இரவில் சிவசங்கரை சந்தீப் நாயர் காரில் கொண்டு விட்டுள்ளார். சிவசங்கரிடம் ஏற்கனவே சுங்க இலாகாவினர் 9 மணிநேரம் விசாரித்தனர். அப்போது சந்தீப் நாயரை தெரியும் என்றாலும் அதிக பழக்கமில்லை என்று கூறியுள்ளார். பல ஆண்டாக தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வரும் சந்தீப் நாயருடன் பழக்கம் உண்டு என்று கூறினால் தனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் சிவசங்கர் இவ்வாறு கூறியிருப்பதாக தெரியவருகிறது. சந்தீப் நாயர்தான் தங்கம் கடத்தலில் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்று என்ஐஏ, சுங்க இலாகாவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* அழுது புலம்புகிறார்
என்ஐஏ அதிகாரிகள் சொப்னாவை பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இரவு பகலாக துருவித் துருவி நடத்தும் விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் பெரும்பாலும் அதிகாரிகளிடம் சொப்னா அழுது புலம்பி வருகிறாராம். சில சமயங்களில் விசாரணைக்கு ஒத்துழைப்பதும் இல்லை என்று தெரிகிறது. அதிகாரிகள் மிரட்டினால் மட்டுமே பதில் கூறுகிறாராம்.

* துணை தூதர் வீட்டில் விசாரணை
திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட பார்சல் துணை தூதர் அட்டாஷே என அழைக்கப்படும் ராஷித் அல் சலாமியின் பெயரில்தான் வந்துள்ளது. இவர் துபாய்க்கு தப்பி ஓடி உள்ளார். இந்த நிலையில் நேற்று துணை தூதர் தங்கியிருந்த திருவனந்தபுரம் பாற்றூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இங்கு துணை தூதர் தவிர தூதரகத்தை சேர்ந்த மேலும் 4 உயர் அதிகாரிகள் தங்கியுள்ளனர். இவர்கள் முன்னிலையில் 7 என்ஐஏ அதிகாரிகள் கொண்ட குழுவினர் பலமணி நேரம் சோதனை நடத்தினர். இதில் கிடைத்த ஆவணங்கள் குறித்து தெரியவரவில்லை.

* சொப்னா மேடம் எல்லாத்துக்கும் காரணம்
சந்தீப் நாயர் சுங்க இலாகா அதிகாரிகளிடம் கூறியதாவது: தங்கம் கடத்துவது தொடர்பான அனைத்து விவரங்களும் சொப்னா மேடத்துக்குதான் தெரியும். அவர்தான் எல்லாவற்றையும் தனது கட்டுக்குள் வைத்திருந்தார். அவர் தரும் தங்கத்தை ரமீஸிடம் கொடுப்பது மட்டுமே எனது வேலை. துபாயில் இருந்து தங்கத்தை யார் மூலம் கடத்துவது? அதை யார் அனுப்பி வைப்பது? உள்பட அனைத்து விபரங்களும் சொப்னா மேடத்துக்கு மட்டுமே தெரியும். அவரை நாங்கள் மேடம் என்றுதான் அழைப்போம். தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தப்படும் போது அதற்கான பணம் அதிகம் கிடைத்தது மேடத்துக்கு தான்.

தூதரகத்தில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவருக்கு பங்கு கொடுக்க வேண்டி இருப்பதால் அதிகம் பணம் வாங்குவதாக ஒருமுறை கூறினார். நான் கைமாற்றும் தங்கத்தை ரமீஸ் யாருக்கு விற்பனை செய்கிறார் என்பது தெரியாது. பல ஆண்டுகளாக கடத்தலில் ஈடுபட்டு வருகிறேன். இதற்கு கமிஷன் மட்டுமே வாங்குவேன். சொப்னாவுக்கும், சிவசங்கருக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு. சிவசங்கர் உயர் அதிகாரி என்பதால் அதை பயன்படுத்தி பல முறைகேடான செயல்களில் ஈடுபட அவருடன் நெருங்கி பழகி வந்தார் சொப்னா. இவ்வாறு அவர் கூறினார்.

* 7 இடங்களில் தங்கம் பரிமாற்றம்
விமான நிலையத்தில் இருந்த தூதரகத்தின் பெயரில் வரும் தங்க பார்சலை பிரிப்பதற்காகவே சொப்னா திருவனந்தபுரத்தில் பல இடங்களில் 4 வீடுகளை வாடகைக்கு எடுத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து தூதரக காரிலோ, தூதரக பெயர்பலகை வைக்கப்பட்ட சொப்னா காரிலோ பார்சல் கொண்டுவரப்படும. இதை வாடகைக்கு எடுத்துள்ள ஏதாவது ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று பிரிப்பார்கள். இதில் தூதரகத்திற்கும் ஏதாவது பொருள் வந்திருக்கும். அதை வேறு பார்சலுக்கு மாற்றிவிட்டு தங்கத்தை சரித்குமார், சந்தீப் நாயரிடம் ஒப்படைப்பார். சொப்னா வாடகைக்கு எடுத்த வீடுகளில் மட்டுமல்லாமல் சந்தீப் நாயரின் கார் ஒர்க்‌ஷாப் போன்ற இடங்களிலும் பார்சலை பிரிக்கும் பணி நடப்பதுண்டு.

* ஜெய்கோஷிற்கு 3 முறை பணி நீட்டிப்பு
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் 2016 நவம்பரில் திறக்கப்பட்டது. 2017ம் ஆண்டு தூதரகத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி துணை தூதர் கேரள டிஜிபிக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை முறைப்படி டிஜிபி மத்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பி அனுமதி பெறவேண்டும். ஆனால் லோக்நாத் பெக்ரா சொந்த விருப்பப்படி பாதுகாப்பு அளிக்க தீர்மானித்தார். இதன்படி திருவனந்தபுரம் ஆயுதப்படை காவலர் ஜெய்கோஷ் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் தூதரகத்திற்கு பதிலாக துணை தூதருக்கு மெய்காப்பாளர் என்ற முறையிலேயே அவர் அனுப்பப்பட்டார்.

இதன்பிறகு  2018 ஜூலை 7, 2019 ஜனவரி 4, 2020 ஜனவரி 8 என 3 முறை பணி நீட்டிப்பு வழங்கி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த 3 முறையும் மத்திய அரசிடம் டிஜிபி எந்த அனுமதியும் பெறவில்லை. ஜெயகோஷை மெய்காப்பாளராக நியமித்ததில் உள்நோக்கம் இருக்கலாம் என்று என்ஐஏ கருதுகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் ஜெய்கோஷிடம் என்ஐஏ விசாரணை நடத்தியது. மீண்டும் விசாரணைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இம்முறை தூதரகத்தில் தங்கம் வந்த பார்சலை எடுக்க சென்றபோது ஜெய்கோஷும் உடன் சென்றதையும் என்ஐஏ கண்டு பிடித்துள்ளது.

Tags : Queen ,Pakir , Kerala Gold Queen Sopna, 20 hawala gang, contact, Pakir information, exposure
× RELATED பறக்கும்படை சோதனையில் 797 பட்டுப்புடவைகள் பறிமுதல்