×

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கபினி அணை நிரம்ப 9 அடி மட்டுமே உள்ளது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒருவாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று மாலை நிலவரப்படி 107 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 14,620 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 4,344 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் 28ம் தேதி முதல் அணையில் இருந்து கர்நாடக பாசனத்திற்கும் தமிழகத்துக்கும் தண்ணீர் திறக்க மாவட்ட பொறுப்பு அமைச்சர் நாராயணகவுடா தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,275.44 அடி உயரத்திற்கு தண்ணீர்  இருந்தது. நீர்வரத்து விநாடிக்கு 7,046 கனஅடியும், வெளியேற்றம் விநாடிக்கு 1,500 கனஅடியாகவும் இருந்தது. கபினி அணை நிரம்ப இன்னும் 9 அடி மட்டுமே பாக்கியுள்ளது. குடகு மாவட்டத்தில் காவிரி பாசன படுகையில் உள்ள 2,859  அடி உயரம் கொண்ட ஹாரங்கி அணையில் நேற்று மாலை நிலவரப்படி 2,854 அடி  உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,224 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 712 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நிரம்ப இன்னும் 5 அடி மட்டுமே பாக்கியுள்ளது. ஹாசன் மாவட்டத்தில்  உள்ள 2,922 அடி உயரம் கொண்ட ஹேமாவதி அணையில் நேற்று மாலை நிலவரப்படி  2,894.33 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3,259 கனஅடி  நீர்வரத்து இருந்த நிலையில் அணையில் இருந்து 1,200 கனஅடி தண்ணீர்  திறக்கப்பட்டது.

* தமிழகத்துக்கு எவ்வளவு?
காவிரி நடுவர்மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு ஜூலை மாதம் 34 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் அணைகள் நிரம்பியுள்ளது. எனவே கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் நேற்று திறக்கப்பட்டதாக காவிரி நீர்ப்பாசனதுறை அதிகாரி விஜயகுமார் தெரிவித்தார்.

Tags : catchment areas ,Karnataka ,Kabini dam ,Cauvery , Cauvery catchment area, heavy rainfall, Karnataka dam, water level increase, Kabini dam, 9 feet
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...