×

செம்பாக்கம் நகராட்சியில் குடிநீர் இணைப்பு கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு: பொறியாளரிடம் பொதுமக்கள் புகார்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் சார்பில், ரூ.2.90 கோடி மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஒப்பந்தம் விடப்பட்டது. இதற்கான பணி ஆணை கடந்தாண்டு மே மாதம் 29ம் தேதி வழங்கப்பட்டது. இதன்படி 8 ஆயிரத்து 200 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஒப்பந்ததாரர் சார்பில், வீடுகளுக்கு இணைப்பு கட்டணமாக தலா ரூ.2500 வசூலிக்கப்படுவதாகவும், கொடுக்க மறுப்பவர்களுக்கு இணைப்பு வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுந்தது. இந்நிலையில், குடிநீர் இணைப்புக்கு ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள், மீண்டும் கட்டணம் செலுத்த கோரி நகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

அதில், குடிநீர் இணைப்பிற்கான விண்ணப்ப கட்டணம், வைப்பு தொகை, ஆய்வு கட்டணம் ஆகியவற்றுடன் சேர்த்து 9 ஆயிரத்து 377 ரூபாயை சொத்து வரியுடன் சேர்த்து 5 ஆண்டுகளுக்கு, 10 சம தவணைகளாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் செம்பாக்கம் பகுதி குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் 14வது வார்டு திமுக முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் நேற்று நகராட்சி பொறியாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அப்போது, குடிநீர் இணைப்புக்காக பொதுமக்கள் 2500 ரூபாய் வரை ஒப்பந்ததாரிடம் செலுத்திய பிறகு, மீண்டும் கட்டணம் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்புவது எந்த விதத்தில் ஞாயம். மக்கள் ஏற்கனவே, செலுத்திய தொகைக்கு ரசீது வழங்க வேண்டும், நகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஏற்கனவே ஒப்பந்ததாரரிடம் பணம் செலுத்தியவரகள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags : Engineer , Sembakkam Municipality, Drinking Water Connection, Charging, Abuse, Public Complaint to Engineer
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...