×

கிராமங்களில் தொற்று அதிகரிப்பால் மீண்டும் திரும்ப முயற்சி கொரோனாவால் அகதிகளான சென்னைவாசிகள்: இ-பாஸ் சிக்கலால் எங்கும் போக முடியாமல் தவிப்பு

சென்னை:  கொரோனாவால் தமிழகத்தில் அகதிகளாக திரியும் நிலைக்கு சென்னைவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களிலும் நோய் தொற்று வேகமெடுப்பதால் சொந்த ஊருக்கு சென்று, மீண்டும் சென்னைக்கு திரும்ப முயற்சி எடுத்தவர்களுக்கு இ-பாஸ் கிடைக்காததால் எங்கும் போக முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 65 சதவீதம் என்ற அளவில் இருந்தது. குடிசை பகுதிகளில் பரவியதால் 3 மண்டலங்களில் கட்டுக்கடங்காமல் பரவியது. இதனால் தமிழக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால்தான் சென்னையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் தமிழக அரசு காரணம் கூறியது. நோய் தொற்றுதான் அதிகரித்துக்கொண்டே சென்றது என்றால், தினமும் நடக்கும் உயிரிழப்புகள் எண்ணிக்கை மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியது. குடிசை பகுதிகளை ஆட்கொண்ட கொரோனா பெரிய பெரிய அபார்ட்மென்ட்களையும் விட்டுவைக்கவில்லை. பல அடுக்குமாடி வீடுகள் முன்பும் தடை செய்யப்பட்ட பகுதி என்ற போஸ்டர்தான் தொங்குகிறது.

இதனால் சென்னையில் இருந்து பலர் உயிர் பயத்தில் தங்கள் வேலைகளை எல்லாம் விட்டு விட்டு குடும்பத்தினரும் பல ஆயிரம் ரூபாய்களை செலவழித்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையை விட்டு சென்றதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். அங்கு பெரிய அளவில் கொரோனா பரவல் இல்லாமல் இருந்ததால் எந்தவித அச்சமும் இல்லாமல் நிம்மதியாக தங்கள் குடும்பத்தினருடன் இருந்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், சென்னையில் கட்டுக்கடங்காமல் நோய் தொற்று பரவியதால் உடனடியாக 15 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் காவல் துறை மூலம் கட்டுப்படுத்தப்பட்டனர். விதிகள் கடுமையாக்கப்பட்டதால் அனைவரும் வீடுகளில் முடங்கினர். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த அளவுக்கு சென்னையில் நோய் தொற்று எண்ணிக்கை தினமும் 4000 என்ற அளவில் இருந்தது. தற்போது சராசரியாக 1000 முதல் 1300 என வெகுவாக குறைந்திருப்பது சென்னை மக்களுக்கு ஓரளவு நிம்மதியை தந்தது.  

இந்நிலையில் பிற மாவட்டங்களில் நோய் தொற்று என்பது மின்னல் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அதிலும் இந்த மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் அதிகமாக இருந்தாலும், அங்கு விழிப்புணர்வு என்பது அறவே இல்லாமல் உள்ளனர். பாதிப்பு என்பது மிகவும் குறைவாக இருந்த நிலையில் தற்போது அங்கு கொரோனா அலை வீசத் தொடங்கியுள்ளது.

அங்கு யாரும் பெரிய அளவில் முகக்கவசத்தை உபயோகிப்பதில்லை, சமூக விலகலையும் கடைபிடிப்பதில்லை என்பது மருத்துவ துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கு கொரோனா பரவல் வேகமெடுத்தால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தங்கள் சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்த சென்னைவாசிகள் ஏற்கனவே தங்கள் சொந்த ஊர்களில் நிம்மதியாக வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். நெருங்கிய உறவினர்கள் கூட சென்னையில் இருந்து வந்திருப்பவர்களை கண்டால் ஓட்டமெடுக்கின்றனர்.

எதிரே வந்தால் கூட வேறு தெரு வழியாக செல்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வசித்த ஒரே காரணத்துக்காக தங்கள் சொந்த ஊர்களில் புறக்கணிப்படுவதால் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். இருந்தாலும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டு அகதிகளாக தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்போது கிராமப்புறங்களிலும் கொரோனா தனது பிடியை இறுக்கி வருவதால் பலர் மீண்டும் சென்னை திரும்ப முடிவு செய்து வருகின்றனர். சென்னையில் நோய் தொற்று குறைந்து வருவதாலும், தனியார் நிறுவனங்கள் பல செயல்பட தொடங்கிவிட்டதாலும் மீண்டும் திரும்புவதற்காக இ-பாஸ் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆனால் எப்படி ஊருக்கு செல்வதற்கு இ-பாஸ் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்ததோ அதே நிலை தான் இப்போது சென்னைக்கு வருவதற்கும் இருப்பதாக விண்ணப்பித்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் சொந்த ஊரை விட்டு வெளியேற முடியாமலும், மீண்டும் சென்னை திரும்ப முடியாமலும் செய்வதறியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, குடும்பத்தினர் சொந்த ஊர்களில் இருந்தாலும் குடும்ப தலைவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கான சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்ற வலியுறுத்தல் தென்மாவட்டங்களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சொந்த ஊரில் இருக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் கூறுகையில், ‘‘சென்னையில் நோய் தொற்று குறைய தொடங்கிவிட்டது. கிராமப்புறங்களுக்கும் கொரோனா வந்துவிட்டதால் இனி எங்கும் இதே நிலை தான். எனவே நிறுவனங்களும் பணிக்கு வர சொல்வதால் மீண்டும் சென்னைக்கே திரும்ப முடிவு செய்துள்ளோம். ஆனால் சென்னைக்கு இ-பாஸ் விண்ணப்பித்தால் ரிஜக்ட் என்று தான் வருகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்’’ என்றனர்.

Tags : Refugees ,Chennai ,villages ,anywhere ,residents , Corona, refugee, Chennai residents, e-pass, suffering due to increase in infection in villages
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு