×

தமிழகத்தில் நிதிச்சுமை காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: தமிழகத்தில் நிதிச் சுமையின் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை திரு.வி.க.நகர் மண்டலம் ஸ்ட்ரான்ஸ் ரோடு பகுதியில் உள்ள மேல்நிலை பள்ளியில் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளும் களப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். பின்னர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் திருவிக நகர் மண்டல சிறப்பு அதிகாரி அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் அருணா, மண்டல அதிகாரி பரந்தாமன் ஆகியோர் சென்றனர்.

இதையடுத்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 38 வருவாய் மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் எடுக்கப்படுகிறது. தினசரி 50,000 வரை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகவே தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. அதிக காய்ச்சல் முகாம்கள், தொற்று பரிசோதனை, வீடு வீடாக சென்று களப்பணியாளரின் பணி, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்குதல், கபசுர குடிநீர், தனிமைப்படுத்துதல், கொரோனா தொற்றினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துதல், இணை நோய்களை மருத்துவ முகாம்கள் நடத்தி கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்ற கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் சென்னை மாநகரில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதேபோன்று தமிழகம் முழுவதும் விரைவில் சகஜ நிலைமைக்கு திரும்பும். திரு.வி.க மண்டலத்தில் 6,775 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 5,088 பேர் குணமடைந்து விட்டனர். 1,604 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிதிச்சுமையின் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. மின் கட்டணத்தை பொறுத்தமட்டில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழக அரசு செயல்படும்.

Tags : Udayakumar ,Tamil Nadu , Financial burden in Tamil Nadu, corona prevention measures, any delays, Minister Udayakumar, Information
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை