×

சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை தழுவும்: சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை தழுவும் என பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் நேற்று அளித்த பேட்டி: கோவையில் 3 இடங்களில் ஒரே இரவில் கோயில்களில் அம்மனுக்கு போர்த்தப்பட்ட சேலை மற்றும் இதர கோயில் பொருட்கள் எரிந்துள்ளன. ஆனால், காவல்துறையினர் ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவர் இதை செய்துள்ளார் என ஒருவரை கைது செய்துள்ளனர். அதிமுக. அரசு காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளித்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். இச்சம்பவத்தில் அதிமுக. அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
 
கோவையில் எழுகிற பயங்கரவாதத்தை, ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். பா.ஜ. பிரமுகர்கள் கடை எரிப்பு, கார் எரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் உண்மை குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட பா.ஜ. பிரமுகர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் நடந்த பயங்கரவாதம்போல் தற்போதும் தலைதூக்க விடக்கூடாது.  யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல், மத்திய உள்துறை அமைச்சகத்தை நாடுவதற்கு தமிழக பா.ஜ. தயங்காது. தேர்தலில் வெற்றி பெறுவது பா.ஜ.விற்கு இரண்டாவது சிந்தனை. முதலில், மக்களின் பாதுகாப்பே முக்கியம். இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். அவர் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை தழுவும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags : defeat ,elections ,AIADMK ,CB Radhakrishnan ,interview ,Assembly , Assembly Election, AIADMK, Biggest Defeat, Embrace, CB Radhakrishnan Interview
× RELATED சென்னை அணிக்கு 2வது தோல்வி: பிரித்வி ஷா அதிரடி அரைசதம்