×

கொரோனாவால் உயிரிழக்கும்முன் முகநூலில் கடைசி பதிவு ‘விலகி விடைபெறுகிறேன்’: விருத்தாசலம் தாசில்தார் உருக்கம்

விருத்தாசலம்: விருத்தாசலம் தாசில்தாராக இருந்தவர் கவியரசு. ஓராண்டு பணி காலம் முடிந்தும், தொடர்ந்து அங்கேயே பணியிலிருந்துள்ளார். எந்த நேரமும் இடமாறுதல் உத்தரவு வரலாம் என்றபோதும் கொரோனா தடுப்பு பணிகளில் கவியரசு தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இவர், கடந்த 9ஆம் தேதி, கொரோனா அறிகுறிகளுடன்  விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் அங்கிருந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக 3 மணியளவில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 18ம் தேதி இரவு இறந்தார். கடந்த 21 மாதங்களாக சிறப்பாக பணி செய்த இவரது இறப்பு விருத்தாசலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தான் இறப்பதற்கு முன் கடந்த 10ம் தேதி  தனது முகநூலில் இறுதிப் பதிவு ஒன்றை கவியரசு பதிவிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் இப்போது பரவி அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் முகநூலில் பதிவிட்ட செய்தியில், அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே, எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே, எனது இரண்டு ஆண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள் உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்து கொள்கின்றேன்.

கொரோனா அறிகுறி காரணமாக தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியிலிருந்து விலகி விடைபெறுகின்றேன். சிறப்பு நன்றிகள் எனது ஜீப் ஓட்டுநர் பாலு. ஒரு சகோதரனை போல இதுகாறும் எனை பாதுகாத்தாய் மீண்டும், மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன், தாசில்தார் கவியரசு என பதிவிட்டுள்ளார். கவியரசுக்கு உமையாள் என்ற மனைவியும் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஆரத்தியா என்ற மகளும் உள்ளனர்.


Tags : Corona ,Vriddhachalam Tashildar Urukkam ,Farewell , Corona, before dying, on Facebook, last post, ‘Say goodbye away’, Vriddhachalam tasildar, melting
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...