×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கி, கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக பதிவு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார். அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் கடந்த 17ம் தேதி போலியாக டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில், ‘தமிழர்களின் குல வழிபாடும், அய்யானாரும், சுடலைசாமி வழிபாடுதான். மாறாக பார்ப்பனர்களின் முருகன் வழிபாடல்ல. ஆகையால் கருப்பர் கூட்டத்திற்கு தேவையான சட்ட உதவிகளை திமுக செய்யும்’ என்று உண்மைக்கு புறம்பாக மர்ம நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், திமுகவுக்கும் கருப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே போலி டிவிட்டர் கணக்கு தொடங்கி அவதூறு பரப்பிய நபர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் குறித்தும் திமுக குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வரும் நபர்கள் மீது தொழில் நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: கருப்பர் கூட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு சட்டபூர்வமான ஆதரவு அளிக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்ததாக கூறி பதிவு ஒன்று வைரலாக பரவியது. அந்த சமூக வலைதள பக்கமானது திமுக தலைவர் பெயரில் போலியாக உருவாக்கப்பட்டு, திமுகவை களங்கப்படுத்தும் வகையில் மர்ம நபர்கள் சிலர் செயல்படுகிறனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக நிர்வாகிகளான உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு மட்டும் பதிவு செய்து விட்டு நடவடிக்கை எடுக்க வில்லை. போலியாக கணக்கு தொடங்கி களங்கம் செய்த விவகாரத்தில் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது. நீதிமன்றத்தை நாடினாலும், காவல் துறையில் புகார் அளித்துள்ளீர்களா என நீதிமன்றம் கேள்வி எழுப்பும். எனவே, திமுக எந்த விதத்திலும் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தான் கூறுவதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவதும் ஒரே கருத்துதான். திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நீதிமன்றத்தை கண்டிப்பாக நாடுவோம். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Tags : MK Stalin ,DMK ,Police Commissioner ,Bharathi , DMK leader MK Stalin, in the name of, fake Twitter account, police commissioner, RS Bharathi complaint
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...