×

கொரோனா தடுப்பூசியான 'கோவாக்சின்'பரிசோதனைக்கு 375 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா அறிவிப்பு

டெல்லி :  கோவாக்சின் தடுப்பூசி, இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை அழிக்க தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் 7 நிறுவனங்கள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பையோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்துள்ளது. இங்கு தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு தன்னார்வலர்களுக்கு கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி வரும் வியாழக்கிழமை போட வாய்ப்புள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடர்பாக எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடங்கிவிட்டது. கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 1125 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 375 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வேறு எந்த உடல் பாதிப்புகளும் இல்லாமல்,18-55 வயதான தன்னார்வலர்கள் மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்த தன்னார்வலர்கள் சுமார் 150 நாட்கள் வரை கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள்.

2ம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு 12-65 வயதான 750 தன்னார்வலர்கள் உட்படுத்தப்படுவர். தரவுகளின் அடிப்படையில், கொரோனா இறப்பு விகிதம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் மட்டுமல்லாது தென் கிழக்கு ஆசியாவிலேயே குறைவு தான். மேலும் தேசிய அளவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறி இருப்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும், சில மாநிலங்களோ அல்லது நகரங்களிலோ கொரோனா பாதிப்பு (உள்ளூர்) லோக்கல் சமூக பரவலாக பரவியுள்ளது. குறிப்பாக டெல்லியில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. பரிசோதனையில் தடுப்பூசியின் திறன் உறுதியானதும் பெருமளவிலான உற்பத்தி தொடங்கும்.வேறு ஏதாவது நாடு தடுப்பூசியை உருவாக்கினாலும் இந்தியா அதன் உற்பத்தியை மேற்கொள்ள முடியும், என்றார்.

Tags : volunteers ,Randeep Gularia , Corona, Vaccine, Kovacin, Testing, Volunteers, Delhi, AIIMS, Director, Randeep Gularia, Announcement
× RELATED அண்டாவை தூக்கிச் சென்ற பறக்கும்படை; பிரியாணி போச்சே தொண்டர்கள் புலம்பல்