×

எழுமலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஆள் விழுங்க காத்திருக்கும் ஆபத்தான தரைமட்ட கிணறு

உசிலம்பட்டி: எழுமலையில் குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் கிணறு இருப்பதால் அப்பகுதியை கடக்கும் போது பொதுமக்கள் உயிர் பயத்தில் செல்கின்றனர். மதுரை மாவட்டம், எழுமலையில் குடியிருப்பு பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கும் கிணறால் உயிர் பயத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எழுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் காச்சகாரியம்மன் கோவில் தெருவில் அதிக குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த தெருவில் பல ஆண்டுகளாக தடுப்புச்சுவர் இல்லாமல் பாதுகாப்பில்லாத கிணறு உள்ளது.

இந்த கிணற்றின் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு இரண்டு தெருக்கள் செல்கிறது. அதில் கார் மற்றும் டூவீலர்கள், உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி சென்று வருகிறது. இரவுநேரங்களில் இந்த வழியாக செல்பவர்கள் கிணற்றில் விழுந்து விடுவோமோ என அச்சத்தில் உள்ளனர். இந்த தெருவிற்கு புதிதாக வருபவர்களுக்கு தெரு ஓரத்தில் இப்படி ஒரு கிணறு இருப்பது தெரியாது. இந்த கிணற்றால் உயிர்சேதம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது, இதனால் கிணற்றை மூடவேண்டும், அல்லது சுற்றுசுவர் அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Elumalai ,area , Ezhumalai, residence, well
× RELATED சுப்பையா நகரில் மைதானத்தை சீரமைத்த பொதுமக்கள்