×

சூட்டிங்மட்டம் நுழைவுவாயிலில் தோடர் அலங்கார வளைவு

ஊட்டி:நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் சூட்டிங்மட்டம்  பகுதி உள்ளது. இங்கு தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. இதனால் இப்பகுதி சூட்டிங்மட்டம் என்ற பெயர் பெற்றது. இப்பகுதி தோடர் இன மக்களை உறுப்பினர்களாக கொண்ட பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டு குழு மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை பயன்படுத்தி சூட்டிங்மட்டம் பகுதி பொலிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. நுழைவாயில் பகுதியில் தோடர் பழங்குடியின மக்களின் குடியிருப்பு அமைக்கப்பட்டு அதன் ஆண், பெண் இருவரும் சுற்றுலா பயணிகளை கை கூப்பி வரவேற்கும் வகையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நுழைவுவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி வனப்பகுதியில் வாழும் வரையாடு, சிறுத்தை, மலபார் அணில் மற்றும் பறவைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் சூழல் மேம்பாட்டு குழு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலம் நிறைவடைந்த பின்னர், நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டால், புதுபொலிவுபடுத்தப்பட்ட சூட்டிங்மட்டம் சுற்றுலா பயணிகளுக்கு புதுபொலிவை தரும் என சூழல் மேம்பாட்டு குழுவினர் தெரிவித்தனர். இதேபோல் ஊரடங்கு சமயத்தில் அங்கு பணிபுரிந்து வந்த சூழல் மேம்பாட்டு குழுவினர் வேலை இழந்து பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் சோலை மரக்கன்றுகள் நர்சரியில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனை நட்டு பராமரிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Todar ,entrance , Shooting level entrance, toad decorative arch
× RELATED தோடர் பழங்குடியின மக்களின் மேய்ச்சல்...