×

அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளத்திற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை: அரசு கொள்முதல் செய்ய கோரிக்கை

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் உரிய விலைகிடைக்காததால் வேதனையடைந்துள்ளனர். தமிழகஅரசு உரியவிலையை நிர்ணயம் செய்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் மானாவரி பயிராக சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது- இவ்வருடம் மக்காச்சோளம் பயிரில் படைப்புழுத் தாக்குதல் அதிகம் ஏற்பட்டதால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மகசூலில் கிடைக்கும் லாபம் குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேலும் அதிர்ச்சியடையும் வகையில் ஒரு மூட்டை மக்காச்சோளத்தை 1,300 ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் விலைக்கு வாங்குகின்றனர்.

விதை விதைத்தல், களைஎடுத்தல், உரம், அறுவடை செய்தல் உள்ளிட்ட பல பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவுசெய்த விவசாயிகளுக்கு கடந்த வருடம் ஒரு மூட்டை 2ஆயிரத்திற்கு மேல் விலைபோனது. தற்போது ஒரு மூட்டை ரூ.1,300க்கு விலைபோவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளைவித்த பயிருக்கு ஆன செலவுத்தொகைகூட கையில் மிஞ்சாது என்பதால் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அறுவடை செய்த மக்காச்சோளத்தை வீட்டில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். பாடுபட்டு பயிர்செய்து உரிய விலை கிடைக்காமல் வீட்டிற்கு கொண்டுவந்த மக்காச்சோளத்தை எலிகள் தின்று நாசம் செய்வதாலும், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து விலைகுறைந்து வருவதால் மேலும்விலைகுறையுமோ என்ற அச்சத்தில் சிலர் கிடைத்த விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். எனவே தமிழக அரசு மக்காச்சோளத்திற்கு உரியவிலையை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் மக்காச்சோளத்தை தமிழகஅரசே நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விலைக்கு எடுத்துக்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Ariyalur district , Ariyalur District, Maize, Price, Farmers Suffering
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி