×

தனியார் நிறுவனத்தினர் வாங்காததால் கல்குவாரியில் 2,000 லிட்டர் பாலை ஊற்றிய வியாபாரி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவர் விவசாயிகளிடம் பால் சேகரித்து, அதனை தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள தனியார் பால் நிறுவனத்திற்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வந்தார். இந்நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பால் நிறுவனத்தினர் 50 சதவீதம் பால் வாங்குவதை நிறுத்தியுள்ளனர். இதனால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு பால் செல்வது தடை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாதேஷ், 2000 லிட்டர் பாலை தனியார் நிறுவனத்திற்கு கொண்டு சென்றபோது, மாவட்ட எல்லையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர் 2000 லிட்டர் பாலையும் காவேரிப்பட்டணத்தில் உள்ள பால் குளிரூட்டும் அறையில் வைத்திருந்தார்.

நேற்று காலை, வேனில் பாலை ஏற்றி கொண்டு காவேரிப்பட்டணம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி என பல்வேறு பால் தனியார் நிறுவனங்களுக்கு சென்றபோதும் யாரும் பால் வாங்க முன்வரவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர் வேறு வழியின்றி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் 2000 லிட்டர் பாலை கொட்டினார். இந்த பால் பாறைகளில் இருந்து அருவி போல் வழிந்தோடி மண்ணில் கலந்து வீணானது. இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.


Tags : Calcutta ,trader ,company , Private Company, Calcutta, 2,000 liters of milk, trader
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...