×

கந்த சஷ்டி கவசம் விவகாரம் : கறுப்பர் கூட்டம் சேனலை நிரந்தரமாக முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடிதம்

சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை நிரந்தரமாக முடக்கக் கோரி யூடியூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியீடு

சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜக மற்றும் இந்துமக்கள்கட்சி- தமிழகம் சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூ-டியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி அசிங்கப்படுத்திய சுரேந்திரன் நடராஜன், தயாரிப்பாளர் மற்றும் கேமராமேன், எடிட்டர் மற்றும் நிர்வாகத்தினர் ஆகிய அனைவரும் சேர்ந்து குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி உள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு சீல்

இரண்டு கட்சிகள் அளித்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேளச்சேரி பகுதியை சேர்ந்த செந்தில்வாசன்(49) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் சீல் வைத்தனர்.

சுரேந்திரன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரான சுரேந்திரன் புதுச்சேரி மாநிலம் அரியங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். தகவலறிந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அங்கு சென்று, சுரேந்திரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இந்நிலையில், ராயபுரத்தில் உள்ள எழும்பூர் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை இல்லத்தில் சுரேந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 30-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சுரேந்திரன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அரசியல் ஆதாயம், மலிவான விளம்பரத்திற்காக பாஜக புகார் கூறுவதாகவும் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு நீக்கப்பட்டுவிட்டதாகவும் மனுவில் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

கறுப்பர் சேனலை முடக்கக் கடிதம்
 
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முழுவதுமாக முடக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கறுப்பர் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சேனலின் பின்னணி மற்றும் நிதி உதவி செய்வோர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : shutdown ,Kanda Sashti ,Federal Crime Branch ,Central Crime Branch , Black meeting, YouTube, affair, legal, action, Kanda Sashti shield
× RELATED ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பஞ்சாபில்...