×

பராமரிப்பு இல்லாததால் அழிவின் பிடியில் அருவிக்கரை இடதுகரை கால்வாய்

குலசேகரம்:  குமரி மாவட்டத்தின் முக்கியமான ஆறுகளில்  பரளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணி அணை கட்டப்பட்டுள்ளது. வலியாற்றுமுகம், மலவிளை,  மாத்தூர், குமரன்குடி வழியாக பாய்ந்து செல்லும் பரளியாற்றின் குறுக்கே  அருவிக்கரை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து அருவிக்கரை  வலதுகரை, இடதுகரை என இரண்டு கால்வாய்கள் பிரிந்து செல்கிறது. வலதுகரை  கால்வாய் திருவட்டார் வழியாக சென்று சாரூர் பகுதியில் நிறைவடைகிறது. அருவிக்கரை இடதுகரை கால்வாய் அணக்கரை, செம்புறாவிளை, மாத்தார்,  கண்ணங்கரை, ஏற்றகோடு, ஆற்றூர், தேமானூர், மங்களாநடை வழியாக பாய்ந்து  அத்தியடி குளத்தை நிரப்பி பருத்தி வாய்க்காலுடன் இணைகிறது.

இந்த கால்வாய்  குமரன்குடி, ஏற்ற கோடு ஊராட்சிகள் ஆற்றூர் பேரூராட்சி போன்றவைகளுக்கு  முக்கிய நீர் ஆதாரமாகவும் , பல நூறு ஏக்கர்  பரப்பளவு வாளை, தென்னை மற்றும் இதர விவசாயத்துக்கும்  பெரிதும் பயன்பட்டு  வருகிறது. ஆற்றூர் பேரூராட்சி பகுதியில்  தேமானூர் குளம், ஞாறாகுளம், காவின்குளம், அன்னியோடு குளம், ஆற்றுகுளம்,  கடந்தைகொட்டி குளம், மச்சிகுளம், அத்தியடிகுளம் என 8 குளங்களின் நீர்  ஆதாரமாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற இந்த கால்வாய் பல ஆண்டுகளாக  பொதுப்பணிதுறையின் பாராமுகத்தால் பாழடைந்து வருகிறது. கால்வாயின் கரை  பகுதிகள் பெரும்பாலான இடங்களில் ஆக்ரமிப்புக்குள்ளாகி தனியார் தோட்டங்களாகவும் விளை நிலங்களாகவும் மாறியுள்ளன.

ஆற்றூர்  பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கால்வாய் பகுதி  ஆக்ரமிப்பில் சிக்கி சிறிய வடிக்கால் போன்று  உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரி  பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதாக ஏட்டளவில் மட்டும் உள்ளது. எந்த பணிகளும்  செய்யப்படுவதில்லை. கால்வாயில் பல இடங்களில் நீர் கசிவு உள்ளது. இதேபோன்று  மாத்தார் பகுதியிலுள்ள தொட்டிபாலத்திலும் நீர்கசிவு அதிகம் உள்ளது. குமரன்குடி, ஏற்றகோடு ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில்  நூறுநாள் வேலைதிட்ட பணியாளர்கள் மூலம் ஆண்டு தோறும் தூர்வாரி  பராமரிக்கப்படுவதால் இங்கு மட்டும் கால்வாயில் தண்ணீர் தடையின்றி  செல்கிறது.

ஆற்றூர் பேரூராட்சிக்குட்பட்ட ஆற்றூர் புளியமூடு  பகுதியிலிருந்து கால்வாய் புதர் வளர்ந்தும்,  பிளாஸ்டிக்  கழிவுகள் நிறைந்தும் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது.   இதனால் இந்த கால்வாயினால் பெரிதும் பயன்பட வேண்டிய ஆற்றூர்  பேரூராட்சிக்குட்பட்ட 8 பெரிய குளங்கள் மற்றும் விளை நிலங்களுக்கு தண்ணீர்  கிடைப்பதில்லை. மழை காலங்களில் கால்வாயில் வரும் அதிக அளவிலான தண்ணீர்  பாய்ந்து செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகும் சம்பவங்களும்  ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில்   கட்டமைப்பு வசதிகள் தேவையான அளவு இல்லாததால் மழை காலத்தில் தண்ணீர்  வீணாகுவதும் வெயில் காலத்தில் வறட்சியால் வதங்குவதும் தொடருகிறது. இதனை  கவனத்தில் கொண்டு,  இருப்பதை பேணி பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்  என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

பராமரிப்புக்கு  ஒதுக்கப்படும் நிதி எங்கே?        
இதுகுறித்து ஆற்றூர் பேரூர் திமுக பொறுப்பாளர் சோழராஜன்  கூறியது:  ஆற்றூர் பேரூராட்சியில்  8  குளங்களுக்கு தண்ணீர் வழங்குவதுடன் பேரூராட்சியை செழிப்பாக்குவதில் இடதுகரை கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆண்டுகளாக  இந்த கால்வாய் தூர் வாரப்படாததால் தண்ணீர் முழுமையாக வர வில்லை.  இதனால் விளை நிலங்கள், நிலத்தடிநீர் ஆதாரம்  பாதிப்படைகிறது.  ஏற்றகோடு, குமரன்குடி ஊராட்சிகளில் நூறு நாள் வேலை திட்ட  பணியாளர்கள் மூலம் ஊராட்சிகள் இதனை பராமரிக்கிறது. எஞ்சியுள்ள  பகுதிகளையாவது பொதுபணித்துறை பராமரிக்க வேண்டும்.
அதனை செய்யாமல் பணிகள்  செய்தது போன்று கணக்கு காட்டுகின்றனர்.

நெல் விவசாயம் இல்லையென்பதால்  பிரச்னை வராது என கருதுகின்றனர். இந்த கால்வாய் பராமரிப்புக்கு  ஒதுக்கப்படும் நிதி எங்கு செல்கிறது என்பது பொதுபணிதுறைக்கு மட்டுமே  வெளிச்சம். உடனடியாக பாழடைந்து காணப்படும் இந்த கால்வாயை தூர்வாரி  பராமரிக்க நடவடிக்கை வேண்டும். இல்லையென்றால் குமரி மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.

Tags : The grip of destruction, the waterfall, the left bank canal
× RELATED ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவதி